×

தவறி விழுந்து கட்டையை பிடித்து ஏற முயன்றபோது கண்ணாடி விரியன் பாம்பு கடித்து கிணற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி

செங்கம், ஆக.8: செங்கம் அருகே கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றபோது தவறி விழுந்த புதுமாப்பிள்ளை கட்டையை பிடித்து ஏற முயன்றபோது, கண்ணாடி விரியன் பாம்பு கடித்து, மீண்டும் கிணற்றில் விழுந்து மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா, காரப்பட்டு கிராமம், கொல்லக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் மகன் பரமேஷ்குமார்(23). விவசாயி. இவரது மனைவி நிரோஷா(19). இருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பரமேஷ்குமார் தனது மனைவி நிரோஷாவுடன் வீட்டிற்கு பின்புறம் உள்ள தங்களது விவசாய கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார். பின்னர், தண்ணீர் எடுத்து கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி கிணற்றில் தவறி விழுந்தார்.

ஆனால், அவருக்கு நீச்சல் தெரியும் என்பதால் நீந்தியபடி அங்கிருந்த கட்டையை பிடித்துக்கொண்டு மேலே ஏறினார். அப்போது, கிணற்றின் கரையில் பதுங்கியிருந்த கண்ணாடி விரியன் பாம்பு பரமேஷ்குமாரை கடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தன்னை பாம்பு கடித்து விட்டதாக, மேலே நின்று கொண்டிருந்த மனைவி நிரோஷாவிடம் கூறியபடி கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த நிரோஷா அலறியடித்தபடி சென்று அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராம மக்கள், உடனே செங்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றின் கரையில் பதுங்கியிருந்த கண்ணாடிவிரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர். இதற்கிடையில், கிணற்றில் மூழ்கியதில் பரமேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். தீயணைப்பு வீரர்கள் அவரது சடலத்தை மீட்டு புதுப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார், சடலத்தை பிரேத பரிசோதனை செய்வதற்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுமாப்பிள்ளையை பாம்பு கடித்து கிணற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post தவறி விழுந்து கட்டையை பிடித்து ஏற முயன்றபோது கண்ணாடி விரியன் பாம்பு கடித்து கிணற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி appeared first on Dinakaran.

Tags : Sengam ,Thiruvannamalai District ,Pudumapillai ,
× RELATED குப்பநத்தம் அணையில் 1,050 கனஅடி உபரிநீர்...