தேனி, ஆக.7: தேனி மாவட்டத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடுவதற்கான முன்னேற்பாட்டு ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று சுதந்திர தினவிழா நடத்துவதற்கான முன்னேற்பாட்டு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிந்து, சமூகபாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் முரளி, கோட்டாட்சியர்கள் பெரியகுளம் முத்துமாதவன், உத்தமபாளையம் தாட்சாயினி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் ஷஜீவனா பேசியதாவது: அரசுத்துறை அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் பட்டியலை தயாரித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது)விடம் வழங்க வேண்டும். மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் பணியினை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும், புதிய பேருந்து நிலையத்ல் இருந்து மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு தேவையான பேருந்துகளை இயக்கும் பணியை போக்குவரத்துத் துறையினரும் மேற்கொள்ள வேண்டும்.
காவல்துறை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர் படை, ஊர்க்காவல்படை சார்பில் அணி வகுப்பு மரியாதை செய்தல், விழா நடைபெறும் இடத்தில் போதுமான அளவில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, போக்குவரத்து வசதி, போதிய பாதுகாப்பு வசதி செய்ய வேண்டும். மேலும் சுதந்திரதின விழாப்பணிகளை வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித் துறை, போக்குவரத்துத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என்றார்.
The post தேனியில் சுதந்திர தினவிழா முன்னேற்பாட்டுக் கூட்டம்: கலெக்டர் தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.