×
Saravana Stores

தேனி மாவட்டத்தில் தொடர் மழையால் அணைகளில் உயர்ந்து வரும் நீர்மட்டம்: விவசாயிகள் மகிழ்ச்சி; 7 வீடுகள் சேதம்

தேனி: தேனி மாவட்டத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், மழைக்கு 7 வீடுகள் சேதமடைந்துள்ளன. தேனி மாவட்டத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன்காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தீபாவளி நேரத்தில் வியாபாரிகளுக்கு கொஞ்சம் வியாபாரம் பாதித்தாலும், மழை பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை, சண்முகநதி அணை மற்றும் கண்மாய்கள் நிரம்பி ரம்மியமாக காட்சி அளித்து வருகின்றன.

அணைகளின் நீர்மட்டம்: 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 58.60 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1952 கனஅடி. அணையில் இருந்து வினாடிக்கு 969 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 259 கனஅடி. அணையில் இருந்து வினாடிக்கு 259 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், மஞ்சளாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 279.37 கனஅடி.

அணை முழுமையாக நிரம்பி உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், வராகநதியில் வெள்ளம் அதிகரித்துள்ளது. மஞ்சளாறு மற்றும் வைகை ஆறு, வராகநதி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 52.55 அடி உயரமுள்ள சண்முகநதியின் நீர்மட்டம் தற்போது 47.30 அடி. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 51 கனஅடி. அணையில் இருந்து நீர்வெளியேற்றம் இல்லை. இதேபோல தேனி மாவட்டத்தில் மஞ்சளாறு வடிநில கோட்டம் மற்றும் முல்லைப்பெரியாறு வடிநில கோட்ட துறை நிர்வாகத்தின் கீழும், வருவாய்த் துறை மற்றும் உள்ளாட்சி நி£வாகங்களின் கீழும் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட கண்மாய்களிலும் நீர் நிரம்பி வருவது தேனி மாவட்ட விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

7 வீடுகள் சேதம்
தேனி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஆண்டிபட்டி மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்த பாண்டி மனைவி பஞ்சவர்ணத்திற்கு சொந்தமான தகர வீடும், ஆண்டிபட்டி மேற்குத் தெருவில் குடியிருக்கும் ஆறுமுகம் மனைவி புஷ்பாவிற்கு செந்தமான வீடும் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. பெரியகுளம் தாலுகாவில் மேல்மங்கலத்தில் மேலத்தெருவில் குடியிருக்கும் சங்கர் பிள்ளை மகன் வடிவேல்முருகன் வீடும், தேவதானப்பட்டியில் பொம்மிநாயக்கன்பட்டி ரோட்டில் தெற்குத் தெரூவில் உள்ள கந்தன் மனைவி நாச்சியம்மாளுக்கு சொந்தமான வீடு சேதமடைந்துள்ளது. போடி தாலுகாவில் உப்புக்கோட்டை அருகே போடேந்திரபுரத்தில் இந்திரா காலனியில் உள்ள காளிமுத்து மனைவி முத்துபேச்சிக்கு சொந்தமான வீடு, பெரியகுளம் தாலுகா தாமரைக்குளம் அம்பேத்கார் தெரூவிலை சேர்ந்த முருகன் மனைவி முனியம்மாளுக்கு சொந்தமான வீடு, இதே கிராமம் சஞ்சய்காந்தி தெருவை சேர்ந்த கருப்பையா மனைவி முருகபாண்டிக்கு சொந்தமான வீடும் சேதமடைந்துள்ளது. இதன்படி, இம்மழைக்கு இதுவரை 7 பேரின் வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது.

மாவட்டத்தில் மழை அளவு (மி.மீ)
ஆண்டிபட்டி-33, அரண்மனைப்புதூர்-30.6, வீரபாண்டி-36.2, பெரியகுளம்-50.2, மஞ்சளாறு-24, சோத்துப்பாறை-54, வைகை அணை-23.2, போடி-13, உத்தமபாளையம்-15.2, கூடலூர்-18.4, பெரியாறு அணை-12, தேக்கடி-14, சண்முகநதி- 41 என நேற்று மழை பதிவாகி உள்ளது.

The post தேனி மாவட்டத்தில் தொடர் மழையால் அணைகளில் உயர்ந்து வரும் நீர்மட்டம்: விவசாயிகள் மகிழ்ச்சி; 7 வீடுகள் சேதம் appeared first on Dinakaran.

Tags : Theni district ,Theni ,Dinakaran ,
× RELATED கூட்டுறவு சங்கங்களில் இன்று கடன் மேளா முகாம்