செங்கல்பட்டு: பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக, தேவனூர் பாலாற்று தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் உருவாகும் பாலாறு அந்த மாநிலத்தில் 93 கிலோ மீட்டர் தூரமும், ஆந்திர மாநிலத்தில் 33 கிலோ மீட்டர் தூரமும், தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் என மொத்தம் 222 கிலோ மீட்டர் தூரமும் பாய்கிறது. கர்நாடக மாநிலத்தில் உருவாகும் பாலாறு செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே வாயலூர் கடலில் வீணாக கலக்கிறது.
இந்த நிலையில் வீணாக கடலில் தண்ணீர் கலப்பதை தடுத்தி நிறுத்த செங்கல்பட்டு அடுத்த தேவனூர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றில் தடுப்பணை கட்டப்பட்டது. அப்போது, பெய்த தொடர் கன மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக கட்டி முடிக்கப்பட்ட அதே ஆண்டு தடுப்பணை முழுவதுமாக உடைந்து தண்ணீரால் அடித்துச் செல்லப்பட்டு கற்கள் மட்டுமே உள்ளன. இந்த தேவனூர் தடுப்பணை தேவனூரைச் சுற்றியுள்ள பாலூர், கொளத்தூர், வில்லியம்பாக்கம், மேலச்சேரி, கொளத்தாஞ்சேரி, கொங்கனாஞ்சேரி, சாத்தணஞ்சேரி, ஒரகாட்டுப்பேட்டை என சுற்றியுள்ள 30 கிராம மக்களுக்கு குடிநீருக்கும், விவசாயத்துக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டுக்குள் உடைப்பு ஏற்பட்டதால், கிராமமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு பாலாற்றில் இருந்து சென்னைக்கு தினசரி தண்ணீர் அனுப்பிவைக்கப்படுகிறது. தற்போது செங்கல்பட்டைச் சுற்றி சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாலாற்றில் ஒரு தடுப்பணை கூட இல்லாத நிலை உள்ளது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமத்தில் குடிநீர் பஞ்சம் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றது. இந்தநிலையில், செங்கல்பட்டு பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாய சங்கங்கள், பொதுமக்கள் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். செங்கல்பட்டு பாலாற்றில் ஒரு தடுப்பணை கட்டினால் இனி வரும் ஆண்டில் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் பஞ்சம் ஏற்படாது.
ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ளத்தின்போது பாலாற்றில் தண்ணீர் வந்தாலும் அந்த தண்ணீரை சேகரிக்க முடியாத நிலை இருந்து வருகின்றது, எனவே தமிழக அரசும், செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகமும் தனிக் கவனம் செலுத்தி செங்கல்பட்டு பாலாற்றில் உடனே ஒரு தடுப்பணை கட்டி விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயனுள்ளதாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், செங்கல்பட்டு அடுத்த தேவனூர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட தடுப்பணையை பருவ மழை தொடங்குவதற்கு முன்பாக மறு சீரமைத்து தேவனூர் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராம மக்கள் பயன்பெற பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
The post பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக தேவனூர் பாலாற்று தடுப்பணையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.