×
Saravana Stores

மணப்பாக்கம் பகுதியில் குளத்தை ஆக்கிரமித்து கட்டிய 9 குடியிருப்புகள் அகற்றம்: நீதிமன்ற உத்தரவால் மாநகராட்சி நடவடிக்கை

ஆலந்தூர்: மணப்பாக்கம் பகுதியில் குளத்தை ஆக்கிரமித்து கட்டிய 9 குடியிருப்புகளை, நீதிமன்ற உத்தரவால் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், 156வது வார்டுக்கு உட்பட்ட மணப்பாக்கம் பிரதான சாலையில், மசூதிக்கு பின்புறம் திருக்குளம் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த குளத்தின் கரையை ஆக்கிரமித்து 9 வீடுகள் கட்டப்பட்டு, அவற்றில் பல ஆண்டுகளாக சிலர் வசித்து வந்தனர். இதுகுறித்து ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற முயன்றபோது, இதற்கு தடை கோரி, ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குளத்தை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்ற உத்தரவிட்டது.

அதன்பேரில், ஆலந்தூர் மண்டல மாநகராட்சி உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில், மண்டல செயற்பொறியாளர் பாண்டியன், உதவி செயற்பொறியாளர் மணிமாறன் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வசித்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு, நீதிமன்ற உத்தரவால் இந்த பணி நடைபெறுவதாக தெரிவித்தனர். இங்குள்ள ஒரு வீட்டை இடிக்க முயன்றபோது, அந்த வீட்டின் உரிமையாளர் வெளியே வர மறுத்து, ரகளையில் ஈடுபட்டார். அவரை போலீசார் வெளியேற்றினர். தொடர்ந்து வீடுகளை இடிக்கும் பணி நடைபெற்றது. வீடுகளை இழந்தவர்கள் தற்காலிகமாக அங்குள்ள சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

The post மணப்பாக்கம் பகுதியில் குளத்தை ஆக்கிரமித்து கட்டிய 9 குடியிருப்புகள் அகற்றம்: நீதிமன்ற உத்தரவால் மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Manapakkam ,ALANTHUR ,Thirukulam ,Manapakkam Main Road ,Ward 156 ,Alandur Zone ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED மழைநீர் கால்வாய் உடைந்து சுரங்கப்பாதையில் நீர் கசிவு: வாகன ஓட்டிகள் அவதி