×
Saravana Stores

வேலூர் மாவட்டத்தில் ஆடி அமாவாசையன்று உழவர் சந்தைகளில் 92 மெட்ரிக் டன் காய்கறிகள் ₹38.61 லட்சத்திற்கு விற்பனை

வேலூர், ஆக.6: ஆடி அமாவாசையொட்டி வேலூர் மாவட்ட உழவர் சந்தைகளில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 92 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் ₹38.61 லட்சத்திற்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் வேலூர் டோல்கேட், காகிதப்பட்டறை, காட்பாடி, குடியாத்தம், பள்ளிகொண்டா, பேரணாம்பட்டு ஆகிய இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறி மற்றும் பழங்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களிலும், மாதந்தோறும் அமாவாசை தினங்களிலும் வழக்கத்தை விட அதிகளவு விற்பனை நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, ஆடி அமாவாசையான நேற்று முன்தினம் பொதுமக்கள் பலர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர், வீடுகளில் படையலிட்டு, வழிபாடு நடத்தினர். இதனால் வேலூர் மாவட்ட உழவர் சந்தைகளில் நேற்று முன்தினம் வழக்கத்தை விட வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக வாழை இலை, வாழைக்காய், அவரைக்காய், முருங்கை கீரை, காய்கறிகள், பழங்கள் கூடுதலாக விற்பனையானது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளில் நேற்று முன்தினம் ஒரு நாளில் ₹38.61 லட்சம் மதிப்பிலான 92 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை செய்யப்பட்டதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post வேலூர் மாவட்டத்தில் ஆடி அமாவாசையன்று உழவர் சந்தைகளில் 92 மெட்ரிக் டன் காய்கறிகள் ₹38.61 லட்சத்திற்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Aadi Amavasi ,Vellore ,Vellore district ,Aadi Amavas ,Vellore Tollgate ,Kagipattarai ,Katpadi ,Gudiyatham ,Pallikonda ,Peranampatu ,Adi Amavasi ,Dinakaran ,
× RELATED காட்பாடி அருகே பயணிகள் ரயிலின்...