×

உலக சுகாதார அமைப்பும் ஹெல்ப்ஃபுல் தகவல்களும்!

நன்றி குங்குமம் தோழி

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

உலக சுகாதார அமைப்பு ஒவ்வொரு நாட்டையும் கவனித்து, அவர்களின் ஆரோக்கியத்தில் எங்கு சிக்கல் உள்ளது, என்னென்ன ஆரோக்கிய சீர்கேடுகள் உள்ளன என்று தனித்தனியாகவும், ஒட்டுமொத்த உலக நாடுகளில் என்னவெல்லாம் ஆரோக்கிய பிரச்னைகள் இருக்கிறது என்று பொதுவாகவும் பலவிதமான ஆய்வுகள் செய்து அவ்வப்போது புள்ளி விவரங்களையும், நம்பத் தகுந்த தகவல்களையும் தந்து வருகிறது.

அதுவும் தொற்றுக் கிருமிகளின் தாக்கம், வானிலை மாற்றங்கள் மட்டுமில்லாமல், தினசரி நாம் வாழ்வில் சந்திக்கும் முதுகு வலி, உடற்பருமன் என எல்லாவற்றையும் முக்கியத்துவமாக கவனித்து, நமக்குப் போதுமான விழிப்புணர்வையும், நம் அரசாங்கத்திற்கு தேவையான அறிவுரைகளையும் சொல்லி வருகிறது.இந்நிலையில் அவற்றில் இயன்முறை மருத்துவத்திற்கு தொடர்புடைய சில ஆரோக்கிய தகவல்களை மட்டும் இங்கே தெரிந்துகொள்வோம், வாருங்கள்.

1.பிறந்த குழந்தை முதல் இரண்டு வயதிற்கு கீழ் உள்ள குழந்தை வரை Screen time எனப்படும் தொலைக்காட்சி, செல்போன் பார்க்கும் நேரத்தை தடை செய்யச் சொல்கிறது. இரண்டு முதல் ஐந்து வயது குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே ஸ்கிரீன் டைம் கொடுக்க வேண்டும். அதுவும், ஒரு மணி நேரத்தை பாதிப்பாதியாக பிரித்து காண்பிக்க வேண்டும் என வரையரை வைத்துள்ளது.அதற்கு மேல் பார்ப்பதால் குழந்தைகளின் நரம்பியல் மண்டலம் பாதிக்கப்படுவதோடு, உடற்பருமன் போன்ற விளைவுகள் எதிர்காலத்தில் தோன்றலாம் என அறிவுறுத்துகிறார்கள்.

2.80% மேல் உள்ள இளம் வயதினர் தினசரி போதுமான உடல் உழைப்பு இல்லாமல் இருக்கின்றனர். இதனால் எதிர்காலத்தில் இதய அடைப்பு, பக்கவாதம் போன்ற பல நோய்கள் வருவதற்கு இவை காரணியாக அமைகிறது.

3.உலகளவில் ஐந்து குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு உள்ளதை உறுதி செய்திருக்கிறது.

4.கருவுற்றிருக்கும் போது நீரிழிவு நோயினை எதிர்கொள்ளும் தாய்மார்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் நீரிழிவு நோய் வரும் அபாயம் உள்ளது.

5.இதய அடைப்பு, பக்கவாதம், உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் என வாழ்வியல் சார்ந்த நோய்களால் ஒரு வருடத்திற்கு நாற்பத்தியொரு மில்லியன் மக்கள் இறக்கின்றனர். அதாவது, உலகளவில் 74% இறப்பு இவ்வகை நோய்களால் நிகழ்கிறது.

6.2022ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில், எட்டில் ஒரு நபர் அதிக உடற்பருமனோடு வாழ்கிறார்கள் எனக் கண்டறிந்துள்ளனர்.

7.உலக அளவில் 17.5% தம்பதியினர் மலட்டுத் தன்மையினால் அவதியுறுகிறார்கள். இதில் வளரும் நாடுகளில் உள்ள சதவிகிதம் 16.5 ஆகவும், வளர்ந்த நாடுகளில் உள்ள சதவிகிதம் 17.8 ஆகவும் இருக்கிறது.

8.ஒவ்வொரு பெண்ணுக்கும் சராசரியாக 28 முதல் 35 நாட்களுள் மாதவிடாய் நிகழ வேண்டும். மேலும் இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை மட்டுமே உதிரப்போக்கு இருக்க வேண்டும். 30 முதல் 80 மிலி வரை மட்டுமே இரத்தம் வெளியேற வேண்டும். இதுவே இயல்பான மாதவிடாய் சுழற்சிக்கு அடையாளம்.

9. உலகளவில் கண் பார்வை பறி போவதற்கும், சிறுநீரக செயலிழப்பு, இதய அடைப்பு, பக்கவாதம் என இவை எல்லாவற்றிற்கும் முதன்மையான காரணம் நீரழிவு நோய் என ஆய்வுகளில் உறுதி செய்துள்ளனர்.

10.ஐந்து வயது முதல் பதினேழு வயது வரை உள்ளவர்கள் குறைந்தது அறுபது நிமிடமாவது ஒரு நாளைக்கு உடல் உழைப்பு செய்தல் அவசியம். பதினெட்டு வயது முதல் அறுபத்தி நான்கு வயது வரை உள்ளவர்கள் குறைந்தது 150 முதல் 300 நிமிடங்கள் உடல் உழைப்பு செய்திட வேண்டும். விளையாடுவது, வீட்டு வேலைகள் செய்வது, நடப்பது, நடனமாடுவது என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

11. வயதான பின் வரும் ஞாபக மறதி நோய்க்கு காரணிகளாக நாம் இளம் வயதில் இருக்கும் போது புகை பிடிப்பது, மது அருந்துவது, அதிக ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடற்பருமன் என வாழ்வியல் முறைகளும், வாழ்வியல் நோய்களுமே என்று உறுதி செய்துள்ளனர்.

12. உலக அளவில் ஒரு வருடத்திற்கு 1.71 பில்லியன் மக்கள் ஒவ்வொரு வருடமும் எலும்பு மூட்டு பிரச்னையால் அவதியுறுகிறார்கள். இதில் முதன்மையாக முதுகு வலியும், இரண்டாவதாக கால் மூட்டு வலியும் அதிகம் பதிவாகி இருக்கிறது.

13.உலக அளவில் 2022ம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி ஐந்து வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகளில் 37 மில்லியன் குழந்தைகளுக்கு அதீத உடற்பருமன் இருப்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

14.உலகளாவிய ஆய்வில் இளம் வயதினர் இரண்டு மடங்கு உடற்பருமனோடும், முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் நான்கு மடங்கு உடற்பருமனோடும் அதிகரித்து உள்ளது எனவும், இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்துகொண்டே போகும் சூழல் நிலவுகிறது என்றும் கண்டறிந்துள்ளனர்.

15.சர்வதேச அளவில் பதினைந்து வயதிற்கு கீழ் உள்ள 180 கோடி குழந்தைகள் மாசுபாடு உள்ள காற்றை சுவாசிக்கின்றனர். அதாவது, கிட்டத்தட்ட 93% குழந்தைகள். இதனால் எதிர்காலத்தில் நரம்புத் தளர்ச்சி, ஞாபக மறதி, இதய நோய், நீரிழிவு நோய், புற்று நோய் போன்ற பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் அதிகம் என உறுதிப்படுத்தியுள்ளனர்.

எனவே, முறையான வாழ்வியலும், போதுமான உடற்பயிற்சியும் இருந்தால் போதும் பாதி நோய்கள் வருவதை தவிர்த்துவிடலாம். அதேபோல, எந்தவோர் உடல் பிரச்னைகளையும் ஆரம்பம் முதலே கண்டறிந்து உரிய சிகிச்சைகள் செய்வதால் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லாமல் தவிர்க்கலாம்.

The post உலக சுகாதார அமைப்பும் ஹெல்ப்ஃபுல் தகவல்களும்! appeared first on Dinakaran.

Tags : World Health Organization ,Kunkum Doshi Gomati Isaikar ,Dinakaran ,
× RELATED பரவும் தொற்று நோய்கள்…