சிவகங்கை, ஆக.5: பள்ளி கல்வித்துறையில் இளநிலை உதவியாளர்களாக பணியாற்றுபவர்கள் உதவியாளர்களாக பதவி உயர்வின்றி பாதிக்கப்படுவதாக முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளனர். பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகம் முழுவதும் பள்ளி கல்வித்துறையில் நேரடி நியமன முறையில் உதவியாளர்கள் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பதவி உயர்வு வழங்கும் போது மற்ற துறைகளில் பின்பற்றப்படும் வழகாட்டு நெறிமுறைகள் பள்ளி கல்வித்துறையில் பின்பற்றப்படுவதில்லை. சுமார் 15ஆண்டுகளாக உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படாமலேயே இளநிலை உதவியாளர்கள் ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். அரசு பணியாளர்களுக்கு பணி நிர்ணயம், பதவி உயர்வு வழங்குவது குறித்து மனித வள மேம்பாட்டுத்துறை செயலாளர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2007-2007ம் ஆண்டில் தகுதியான பணியாளர்கள் இல்லாததால் அந்த ஆண்டு மட்டும் நேரடி நியமனம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதே நடைமுறை ஆண்டுதோறும் தொடர்கிறது. தற்போது 731 காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி பெற்ற இளநிலை உதவியாளர்கள் இருக்கும் போது நேரடி நியமன முறை தேவையற்றது. இதனால் இளநிலை உதவியாளர்களாக பணியாற்றுபவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே எங்களது பதவி உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
The post பள்ளி கல்வித்துறையில் பதவி உயர்வு வழங்க மனு appeared first on Dinakaran.