வடமதுரை, ஆக. 5: வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி பெற்றும் நேர்த்திக்கடன் செலுத்தினர். வடமதுரை அருகே கொல்லப்பட்டி கிராமம் ஜி.குரும்பபட்டியில் மகாலட்சுமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடிப்பெருக்கை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு பங்காளிகள் அழைப்புடன் திருவிழா துவங்கியது. நேற்று பாரம்பரிய வழிபாடுகள் முடித்து கோயில் முன்பாக விரதமிருந்த பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் அமர்ந்தனர்.
பூசாரி லோகநாதன் ஆணிகளான பாதகுரடு அணிந்தும், வயிற்றில் ஈட்டியால் குத்துதல் உள்ளிட்ட வழக்கமான பாரம்பரிய வழிபாடுகளை முடித்து நேர்த்திக்கடன் வழிபாட்டிற்காக அமர்ந்திருந்த பக்தர்கள் தலையில் ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார். பின்னர் சேர்வைகாரர்களிடம் பக்தர்கள் ஒவ்வொரு சாட்டையடி பெற்று கோயிலுக்குள் சென்று வழிபட்டனர். வழிபாட்டின் துவக்கம் முதல் இறுதி வரை பக்தர்களும், குழுமியிருந்தவர்களும் ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என கோஷமிட்டபடி இருந்தனர். ஏற்பாட்டினை கோயில் தலைவர் முருகேசன், செயலாளர் மீர்ராஜ், பொருளாளர் பெருமாள் செய்திருந்தனர்.
The post கோயில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் appeared first on Dinakaran.