×

திருக்கோவிலூரில் 11ம் நூற்றாண்டு ராஜேந்திர சோழன் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

திருக்கோவிலூர், ஆக. 4: திருக்கோவிலூர் அடுத்த கீழையூரில் உள்ள பிரசித்தி பெற்ற வீரட்டானேஸ்வரர் சிவன் கோயிலில் அடுத்த மாதம் தமிழ்நாடு அரசால் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோயில் புனரமைக்கும் பணி கடந்த 4 மாதமாக நடைபெற்று வருகிறது. அதன் பேரில் நேற்று கோயில் முன்பகுதி தரைத்தளத்தில் கற்பலகையை பதிப்பதற்காக தரை சமன்படுத்தும் போது கல் தூண்கள் மண்ணில் புதைந்து இருந்ததை கண்டு நிர்வாகத்தினர் கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாறு கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து கல்வெட்டு ஆய்வாளர்கள் வீரராகவன், சிங்கார உதயன் தலைமையில் செயல் அலுவலர் அறிவழகன், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியின் முனைவர் இம்மானுவேல் மற்றும் அன்பழகன் ஆகியோர் முன்னிலையில் கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர். அதில், கல் தூண்களில் சிவனை வழிபடுவது போன்ற தோற்றத்தில் முனிவர் சிற்பம் பொறிக்கப்பட்டிருந்ததும், தூண்களில் இருந்த எழுத்துக்களை ஒழுங்குப்படுத்தி படித்து பார்த்த போது ராஜேந்திர சோழன் காலத்து 11ம் நூற்றாண்டு கல்வெட்டுகள் என கண்டறியப்பட்டது. மேலும் அந்த கல்வெட்டில் இக்கோயிலுக்கு திருவிளக்கு ஏற்றுவதற்காக நிலம் தானமாக வழங்கப்பட்டதையும், அரசன்குப்பம், அரசனந்தல், வழக்காடிகுப்பம், திருவெண்ணெய்நல்லூர் ஆகிய பகுதிகளில் ஆயிரம் குழி அளவு கொண்ட நிலம் தானமாக கொடுக்கப்பட்டதாகவும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் போது கோயில் முதன்மை அர்ச்சகர் சுந்தரமூர்த்தி, நிரேஷ்குமார், கவிஞர் அஜய் உட்பட பலர் உடனிருந்தனர்.

The post திருக்கோவிலூரில் 11ம் நூற்றாண்டு ராஜேந்திர சோழன் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Rajendra ,Tirukovilur ,Thirukovilur ,Kumbabhishekam ,Tamil Nadu government ,Veerataneswarar Shiva temple ,Keehoyur ,
× RELATED திருக்கோவிலூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை