×
Saravana Stores

சக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா கொடியேற்றம்

கமுதி, ஆக.4:கமுதி அருகே கருங்குளம் சக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு யாக சாலை பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக, அம்மன் படம் பொறித்த கொடியை, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க விநாயகர் கோயிலில் இருந்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக, சக்தி மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர். அப்போது ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் உட்பட 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மஞ்சள் கயிறு காப்பு கட்டி, தங்களது விரதத்தை துவக்கினர். பின்னர் தீபாராதனை நடைபெற்று, கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. பின்னர் அனைவருக்கும் கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.

விழாவில் ஊராட்சி தலைவர் நாகரத்தினம், ஒன்றிய குழு துணை தலைவர் அய்யனார் மற்றும் விழா கமிட்டியினர் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 8ம் தேதி கோயில் முன்பு திருவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. 9ம் தேதி ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும். காலை கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர். பின்னர் மாலை அக்னிசட்டி, வேல்குத்துதல், ஆயிரம் கண் பானை, கரும்பாலை தொட்டில் மற்றும் பக்தர்கள் உடல் முழுவதும் களிமண் சேறு பூசி, மேள தாளங்களுடன் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோவிலுக்கு வருதல் போன்ற நேர்த்திக் கடன் செலுத்துவர். 10ம் தேதி காலை பால்குட ஊர்வலம் மற்றும் மாலை வாணவேடிக்கை, மேளதாளத்துடன் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்று,குண்டாற்றில் கரைத்தல் நிகழ்ச்சி நடைபெறும்.

The post சக்தி மாரியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா கொடியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Aadi Pongal Festival ,Shakti Mariamman Temple ,Kamudi ,Karunkulam Shakti Mariamman Temple ,Ganapati ,Homam ,Poornakudi ,Deeparathana ,Aadi Pongal Festival Flag Hoisting ,
× RELATED கமுதியில் மழையால் பாதிப்படைந்த சாலைகள் சீரமைக்கும் பணி தீவிரம்