* பாதிக்கப்பட்ட தமிழ் நடிகைகளிடம் ரகசிய விசாரணை நடத்த முடிவு
* சிக்கி தவிக்கும் 50 இளம் பெண்களை தூதரகம் மூலம் மீட்கும் பணி தீவிரம்
* கோடிக்கணக்கில் பணம் வாங்கிய இடைத்தரகர்கள் யார் என கைதான புரோக்கர் ஷகீல் பரபரப்பு வாக்குமூலம்
சென்னை: கைதான பிரபல பாலியல் புரோக்கர் ஷகீல் அளித்த வாக்குமூலத்தின்படி, கலை நிகழ்ச்சி என ஒப்பந்தம் மூலம் துபாய் சென்று பாதிப்புக்குள்ளான தமிழ் நடிகைகளிடம் விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். அதேநேரம் துபாயில் தற்போது சிக்கியுள்ள நடிகைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட இளம் பெண்களை மீட்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. சில விஐபிக்கள் பாலியலுக்காக துபாய் சென்று உல்லாசமாக இருந்தது தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் மற்றும் இளம் பெண்கள் பலரை கலை நிகழ்ச்சி என்ற பெயரில் ஒப்பந்தம் செய்து துபாய்க்கு அழைத்து வந்து, பாஸ்போர்ட், ஆதார் உள்ளிட்டவை பறிமுதல் செய்து சிலர் சட்டவிரோதமாக நட்சத்திர ஓட்டலில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக இந்திய தூதரகம் மூலம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)க்கு தகவல் வந்தது. அதன்படி, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சம்பவம் குறித்து தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதியது. அந்த கடித்தை தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி மத்தியக் குற்றப்பிரிவு துணை கஷினர் வனிதா மற்றும் விபச்சார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி குழுவினர் விசாரணை நடத்தினர்.
அப்போது, துபாயில் பாலியல் புரோக்கர்களிடம் இருந்து தப்பி இந்திய தூதரகத்தில் புகார் அளித்த கேரளாவை சேர்ந்த 21 வயதான இளம் பெண்ணை விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிகள் சென்னைக்கு நேரில் அழைத்து, 3 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தி, துபாயில் நடந்த சம்பவத்தை வாக்குமூலமாக பதிவு செய்தனர். அதன் பிறகு, சென்னையில் இருந்து துபாய்க்கு கலை நிகழ்ச்சி என ஒப்பந்தம் முறையில் அனுப்பி வைத்த குறும்பட இயக்குநரான மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரகாஷ் ராஜ்(24), தென்காசி மாவட்டம் இலஞ்சி பகுதியை சேர்ந்த ஜெயகுமார்(40), சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த ஆபியா(24) ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், நடிகைகள் மற்றும் நடன கலைஞர்களிடம் போடப்பட்ட ஒப்பந்த பத்திரம், துபாய் சென்ற நடிகைகளிடம் பெறப்பட்ட கைரேகை மற்றும் கையொப்பமிட்ட கடன் பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர் அவர்கள் அளித்த தகவலின் படி, துபாயில் பெரிய அளவில் நடிகைகளை வைத்து பாலியல் தொழில் செய்து வரும் கேரளவை சேர்ந்த முஸ்தபா புத்தங்கோட்(எ)ஷகீல் (48) ஓரிரு நாட்களில் இந்தியா வர இருப்பது தெரியவந்தது. உடனே விபச்சார தடுப்பு பிரிவு சார்பில் பாலியல் புரோக்கர் ஷகீல் அவரது காதலி உட்பட 4 பேரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. துபாயில் இருந்து பாலியல் புரோக்கர் ஷகீல் திருவனந்தபுரம் வந்தார். அப்போது விமான நிலையத்தில் இருந்து சுங்கத்துறை அதிகாரிகள் ஷகீலை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிகள் திருவனந்தபுரம் சென்று ஷகீலை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
கைதான பிரபல பாலியல் புரோக்கர் ஷகீல் அளித்த வாக்குமூலம் குறித்து விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கேரளா மாநிலம் மலப்புரம் புத்தங்கோட் பகுதியை சேர்ந்த ஷகீல்(56). இவர் தனது காதலி மற்றும் 2 நண்பர்கள் உதவியுடன் துபாயில் சிறு சிறு நடிகைகளை வைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார். கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் நட்சத்திர ஓட்டல்களில் நடந்ததால், ஓட்டலில் உள்ள பார்களுக்கு நடன கலைஞர்கள் தேவைப்பட்டது. அதை புரோக்கர்கள் மூலம் முதலில் நடன கலைஞர்களை கேரளா மற்றும் சென்னையில் உள்ள நண்பர்கள் உதவியுடன் சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தேர்வு செய்து ஒப்பந்த முறையில் அனுப்பி வந்தார்.
தமிழ் திரைப்படங்கள் துபாயில் உள்ள திரையரங்குகளில் ஓடுகிறது. இதனால் தமிழ் நடிகைகள் மற்றும் துணை நடிகைகளுக்கு துபாயில் தொழிலதிபர்களிடம் அதிக வரவேற்பு இருந்தது. அதை ஷகீல் தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டல் மற்றும் பார்களில் உள்ள பாலியல் புரோக்கர்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டார். துபாயில் கலை நிகழ்ச்சிகள் நடத்த உதவிய இயக்குநர்கள் மற்றும் சில தமிழ் நடிகைகள் உதவியுடன் முழு நேர பாலியல் புரோக்கராக ஷகீல் உருவானார். துபாயில் உள்ள தொழிலதிபர்கள் தமிழ் நடிகைகளுக்கு பணத்தை வாரி இறைத்தனர்.
இதற்காக ஷகீல் தனது காதலியுடன் இணைந்து சென்னையில் ஏற்கனவே பழக்கமான இயக்குநர்கள் மற்றும் நடிகைகளுக்கு பல கோடி ரூபாய் முன் பணமாக கொடுத்து வசப்படுத்தினார். மாதம் 2 முறை ஷகீல் துபாயில் இருந்து சென்னைக்கு வந்து, கலை நிகழ்ச்சி என்ற பெயரில் போலியான ஒப்பந்தம் மூலம் வாய்ப்பு கிடைக்காத தமிழ் நடிகைகள் மற்றும் சின்னத்திரை நடிகைகளை தேர்வு செய்து, அவர்களின் வயதுக்கு ஏற்றப்படி முன்பணமாக ரூ.5 முதல் ரூ.10 லட்சம் வரை கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார். நாளடைவில் நல்ல வருமானம் கிடைத்ததால், ஷகில் துபாயிலேயே ‘தில்ரூபா’ என்ற பெயரில் கிளப் சொந்தமாக நடத்தி வந்தார்.
தனது ‘தில்ரூபா’ கிளப்புக்கு சென்னையில் இருந்து ஒப்பந்த முறையில் அழைத்து சென்ற தமிழ் நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை இரவு 7 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை கிளப்புக்கு வரும் துபாய் ஷேக்குகளுக்கு விருந்தாக்கியுள்ளார். குறைந்த நாட்களிலேயே பல கோடிகளில் ஷகீல் புரண்டார். தமிழ் இளம் நடிகைகள் மற்றும் முன்னணி மூத்த நடிகைகள் என 30 பேரை ஷகீல் தன் கட்டுப்பாட்டில் வைத்து தடையின்றி துபாயில் பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளார். இவரது காதலி மற்றும் இவர் நடத்தும் கிளப்பில் மேலாளர்களாக உள்ள 2 பேரை பிடிக்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் ஷகீலுக்கு ஒவ்வொரு மாதமும் நடிகைகள் மற்றும் இளம் பெண்களை துபாய்க்கு அனுப்பி வந்த நடிகைகள் மற்றும் இயக்குநர்கள் யார், யார் என்பது குறித்தும் முழுமையாக தகவல் அளித்துள்ளார். அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை பணம் சட்டவிரோதமாக ஷகீல் கொடுத்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்களிடம் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் சென்னையில் இருந்து துபாய்க்கு தமிழ் நடிகைகள் என 100க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் துபாயில் ஷகீல் நடத்தும் ‘தில்ரூபா’ கிளப் மற்றும் ‘சில்ரிட்ஜ்’ நட்சத்திர ஓட்டலில் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை பறித்து வைத்து கொண்டு, அடைத்து வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்ட நடிகைகள் உட்பட இளம் பெண்கள் பலர், சினிமா வாய்ப்பு பறிபோய் விடும் என்ற அச்சத்தால் வெளியில் சொல்லாமல், வீட்டில் துபாயில் கலை நிகழ்ச்சிக்கு சென்று வந்ததாக கூறி வந்துள்ளனர். இது இவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டனர். எனவே ஷகீல் மூலம் பாதிக்கப்பட்ட தமிழ் நடிகைகள் பட்டியல் தற்போது எடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் விரைவில் ரகசிய விசாரணை முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
தமிழக விஐபிக்கள் சிலர், சென்னையில் நடிகைகள் மற்றும் பெண்களை அழைத்துக் கொண்டு ஓட்டல்களுக்கோ, ரிசார்ட்களுக்கோ செல்ல முடியாது என்பதால் துபாய் சென்று ஓட்டல்களில் தங்கிக் கொண்டு, அவர்களுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அந்த விஐபிக்களை தெரியும் என்று கூறப்படுகிறது. அவர்களில் பலர், முன்னாள் அமைச்சர்கள் என்றும் சிலர் முன்னாள் அமைச்சர்களின் மகன்கள் என்றும் கூறப்படுகிறது. சில தொழிலதிபர்களின் மகன்களும் அடிக்கடி துபாய் சென்று இந்தப் பெண்கள் தங்கியிருந்த ஓட்டல்களில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்தும் போலீசார் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
* பாலியல் புரோக்கர் ஷகீல் வங்கி கணக்குகள் ஆய்வு
துபாயில் கிளப் நடத்தி வரும் பாலியல் புரோக்கராக உள்ள ஷகீல் மற்றும் அவரது காதலி வங்கி கணக்குகள் மூலம் பல கோடி ரூபாய் வரை இடைத்தரகர்களுக்கு கொடுத்துள்ளனர். இதனால் ஷகீல் வங்கி கணக்கு விபரங்களை விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வழக்கில் அமலாக்கத்துறையும் விரைவில் விசாரணை நடத்த உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்
* கமிஷனர் நடவடிக்கையால் பாய்ந்தது குண்டர் சட்டம்
தமிழ் நடிகைகளில் சிலரை வைத்து துபாயில் பாலியல் தொழில் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஷகீல் மூலம் நடிகைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் தவறாக பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டுள்ளதால், சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண் உத்தரவுப்படி விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஷகீலை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
* வெளிநாட்டு சொகுசு கார் வாங்கிய பிரபல நடிகை
துபாயில் பாலியல் தொழில் நடத்திய ஷகீலுக்கு சென்னையில் உள்ள தமிழ் நடிகை ஒருவர் அதிகளவில் இளம் பெண்களை அனுப்பி வைத்துள்ளார். அதற்காக ஷகீல் அநத் நடிகைக்கு பல கோடி ரூபாய் வரை பணத்தை கொடுத்துள்ளார். அந்த பணத்தில் நடிகை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார் ஒன்று அண்மையில் வாங்கியுள்ளார். ஓரிரு படங்களில் மட்டும் நடித்துள்ளார். அதன் பிறகு பட வாய்ப்பு கிடைக்காததால் முழு நேர பாலியல் புரோக்கராகவே மாறியுள்ளார். அவரிடம் விரைவில் விபச்சார தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
The post கலை நிகழ்ச்சி என அழைத்து சென்று பாலியல் தொழிலில் தள்ளிய கொடூரம்: உல்லாசத்துக்காக துபாய் சென்ற தமிழக விஐபிக்கள் appeared first on Dinakaran.