×

இலங்கை கடற்படையினரை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: ராமேஸ்வரம் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் கார்த்திகேயன் என்பவரின் படகு சேதம் அடைந்ததால் நான்கு மீனவர்கள் கடலில் குதித்துள்ளனர். அவர்களில் மலைச்சாமி, மூக்கையா, முத்து முனியாண்டி ஆகிய மூவரையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கடலில் குதித்த ராமச்சந்திரன் என்பவரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. படுகாயம் அடைந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர் மலைச்சாமி இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள புங்குடு தீவு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் இறந்து விட்டதாகவும் இலங்கை அரசு கூறியுள்ளது.

இந்த மரணம் விபத்து அல்ல. இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் உண்டானது. எனவே, இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை ஒன்றிய அரசு கைது செய்ய வேண்டும். இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்தவும், இலங்கை சிறைகளில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கவும், இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை மீட்டுத் தரவும் இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post இலங்கை கடற்படையினரை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,CHENNAI ,Liberation Tigers Party ,Sri Lankan Navy ,Rameswaram ,Karthikeyan ,
× RELATED மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக...