- தரிசனம்
- அம்மன்
- தஞ்சை-கருந்தட்டான்குடி
- ஸ்ரீகோடியம்மன்
- Kodiyamman
- தஞ்சாசுர
- பச்சக்காலி
- பவல்கலி
- விஜயாலயா
- சோழ
தஞ்சை-கருந்தட்டான்குடி ஸ்ரீகோடியம்மன்
கோயில் கருவறையில் கோடியம்மன் வலது காலை பீடத்தின் மேல் மடக்கி தூக்கியும் இடது காலால் தஞ்சாசுரனை மிதித்தபடியும் காணப்படுகிறாள். கருவறைக்கு வெளியே பச்சைக்காளி, பவளக்காளி என்று இரு திருமேனிகள். விஜயாலயச் சோழன் நிறுவிய கோயில். ஆதியில் சோழ தேசத்தில் வளம் குன்றியதன் காரணம், சந்துருகோபன் எனும் ஒழுக்கம் குறைந்த அந்தணனே என்றும் இந்த காளியே அவனை கொன்று தர்மத்தை நிலைபெறச் செய்தாள் என்றும் தலவரலாறு கூறுகிறது. மிகப்பழமையான இந்தக் கோயில் தஞ்சை கருந்தட்டான்குடி எல்லையில் அமைந்துள்ளது.
தஞ்சாவூர் வடபத்ரகாளி
தஞ்சை பூமால் ராவுத்தர் கோயில் தெருவில் வடபத்ரகாளியம்மன் எனும் பெயரில் உள்ள நிசும்ப சூதனி ஆலயம் அமைந்துள்ளது. சும்பன் நிசும்பன் எனும் அசுரர்களின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத தேவர்கள் தேவியை நோக்கி துதித்தனர். தேவி காளியாக கௌசீகி எனும் பெயரோடு வெளிப்பட்டு அசுரர்களை வதைத்தாள். அதனாலேயே நிசும்பசூதனி எனும் பெயர் வழங்கப்படுகிறது. விஜயாலயச் சோழன் முதல் ராஜராஜன், ராஜேந்திரன் என்று மாபெரும் சோழ அரசர்கள் இந்த காளியை வணங்கிச் சென்றனர். தீய சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள். இத்தல மண்ணை மிதித்தாலே போதும். தெளிவு பெறுவது நிச்சயம்.
மயிலாப்பூர் ஸ்ரீ கோலவிழியம்மன்
கோலவிழியம்மனின் உற்சவ திருவுருவை வைத்து இந்தக் கோயில், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலானது என்று கண்டறிந்திருக்கிறார்கள். சுனாமி தாக்கியபோது கடற்கரையோரம் வசித்த மக்கள் ஓடி வந்து தஞ்சம் புகுந்தது இந்த அன்னையின் ஆலயத்தில்தான். ஒரு சமயம் கயிலையில் பிரணவத்திற்கு பொருள் கேட்டாள், உமையன்னை. ஈசன் அதற்கு பொருளுரைத்தபோது அங்கே தோகை விரித்தாடிய மயிலின் அழகிய கவனம் செலுத்தினாள், உமை.
அதனால் கோபம் கொண்ட ஈசன், தேவியை மயிலாய் மாறிட சாபமிட்டான். பூவுலகில் திருமயிலையில் அன்னை மயிலுருவாய் மாறி ஈசனை துதித்து வந்தாள். அப்போது, இப்பகுதியில் தீய சக்திகளால் நல்லோர் பாதிக்கப்பட்டனர். அதனால் ஈசன் மகாகாளியை மயிலைக்கும், மயிலுக்கும் காவலாய் அமர்ந்து காக்க ஆணையிட்டார். ஈசனின் ஆணைப்படி மயானத்தை நோக்கி அமர்ந்து அருளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறாள், கோலவிழியம்மன். இறைவிக்கு முன் கல்லினாலான சிறிய தேவி சிலை உள்ளது. அபிஷேகங்கள் எல்லாம் இந்த சிலைக்கே. பெரிய திருவுரு கொண்ட தேவிக்கு பச்சரிசி மாவில் விதவிதமான நிறங்களைக் கலந்து மாவுக்காப்பு சாற்றினால் தீராக் கடன்கள் தீர்ந்து விடுகின்றன. மயிலை, கோபதி நாராயணசாமி சாலையில் இந்த ஆலயம் உள்ளது.
மாகாளிக்குடி ஸ்ரீ உஜ்ஜயினி காளி
வடக்கே உஜ்ஜயினியை ஆண்ட விக்ரமாதித்யன், தன் அமைச்சரான பட்டியின் ஆலோசனைப்படி உஜ்ஜயினி காளியை பூஜைக்காக எடுத்து வந்து இத்தலத்தில் வைத்து வழிபட்டான். கருவறையில் காளியம்மன் விரிசடையுடன் தனது வலது கரங்கள் இரண்டிலும் சூலம், தீ ஜுவாலையை தாங்கியுள்ளாள். இடது கரத்தில் கபாலம் தாங்கியிருக்கிறாள். காதுகளில் அழகிய பத்ர குண்டலங்கள். விக்ரமாதித்தனது வாகனமான வேதாளத்திற்கு இங்கு தனி சந்நதி உள்ளது. 700 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் போசாள மன்னர்களால் கட்டப்பட்டது. திருச்சி-சமயபுரத்திற்கு தென்கிழக்காக ஒரு கி.மீ. தூரத்தில் மாகாளிக்குடி அமைந்துள்ளது.
வீரசிங்கம்பேட்டை ஸ்ரீ மாரியம்மன்
குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கும் கிராமம், வீரசிங்கம்பேட்டை. இவ்வூரின் மையத்தே அருள்கிறாள், மாரியம்மன். பொதுவாக மாரியம் மனின் சகோதரிகள் ஏழு பேர் என்பார்கள். அவர்களில் கடைசி தங்கையே வீரசிங்கம் பேட்டையில் வீற்றிருக்கும் இளமாரியம்மன். புன்னைநல்லூர் கோயிலை விட பழமையானது. இப்பகுதி மக்களுக்கு எங்கு திருமணம் நடந்தாலும் இங்கு அம்மனை வழிபட்ட பின்னரே தங்கள் இல்வாழ்வைத் தொடங்குகின்றனர். தஞ்சாவூர்-திருவையாறு வழியில், திருக்கண்டியூரிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் இக்கோயில்
அமைந்துள்ளது.
கொல்லங்குடி ஸ்ரீ வெட்டுடைய காளி
தன் அரசியான வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்காத உடையாள் என்ற கன்னிப்பெண், ஆங்கிலேய அரசால், அரியாக்குறிச்சி எனும் ஊரில் தலை வெட்டி எறியப்பட்டாள். உடையாள் வெட்டுப்பட்டதால் வெட்டுடையாள் என்றழைக்கப்பட்டாள். அங்கேயே அவளுக்கு சமாதி அமைத்தனர். சமாதியின் மேற்பரப்பில் காணப்பட்ட எழுத்துகள் காளிக்கு உரியனவாக இருந்தன. அதனால் காளிக்கும் அங்கேயே தனிச் சந்நதி நிறுவினர். வேலுநாச்சியார் தன் பொருட்டு உயிரிழந்து காளியின் உருவெடுத்த வெட்டுடையாளுக்கு திருமாங்கல்யம் செய்து கொடுத்து சுமங்கலியாக்கினார். இன்றும் மிகுந்த உக்கிரத்தோடு அமர்ந்து, மக்கள் குறைகளை தீர்த்து வைக்கிறாள் வெட்டுடையாள். சிவகங்கையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கொல்லங்குடி கிராமம் அமைந்துள்ளது.
குமரகுருபரரும் அம்பிகையும்
ஒரு சமயம் குமரகுருபரர் புனிதத்தலமான காசிக்குச் சென்றார். அப்போது அந்த புனிதமான காசி நகரத்தின் சிவன் கோயிலும், அதன் சம்பிரதாயம் மற்றும் இந்து மதமே முகலாயர்களின் அடக்குமுறையால் மிகவும் ஷீணமடைந்திருந்தது. இந்த நிலையை மாற்ற நினைத்த குமரகுருபரர் அந்த முகலாய மன்னனிடம் தாம் பேசி சைவ மதத்தை மீட்க விரும்பினார். ஆனால் காசியை ஆண்ட மன்னன் டில்லி பாதுஷா, துறவியாகிய இவரை மதியாது, அமர்வதற்கு இருக்கை கூட கொடுக்காமல் அவமதித்தான்.
மன்னனின் அன்பைப் பெற இந்துஸ்தானி மொழிப் புலமைத் தேவைப்பட, குமரகுருபரர் கங்கைக் கரைக்குச் சென்று ‘வெண்டாமரைக்கன்றி…’ எனத் தொடங்கும் பத்துப் பாடல் கொண்ட ‘சகலகலாவல்லி மாலை’யால் சரஸ்வதி தேவியைத் துதித்தார். அவள் அருளால் இந்துஸ்தானி மொழிப் புலமை உடனே கைவரப்பெற்ற அவர், இந்த முகலாயர்களின் இறுமாப்பையும் அடக்க எண்ணி, பராசக்தியிடம் வேண்டி, அவளது சிம்மத்தை வாகனமாகப் பெற்று அதன் மீதேறி முகலாய மன்னனின் அரசவைக்கு சென்று, அந்த மன்னனிடம் தனது விருப்பத்தை அவர்களின் மொழியிலேயே எடுத்து கூறினார். இக்காட்சியை கண்டு அதிர்ந்த அந்த முகலாய மன்னன் குமரகுருபரரிடம், ‘‘காசியில் கருடன் சுற்றுவதில்லை.
கருடன் சுற்றினால் கருடன் சுற்றும் இடத்தில் மடம் அமைக்க இடம் கொடுக்கிறேன்,’’ எனத் தெரிவித்தான். குமரகுருபரர் இறைவனை நோக்கிப் பாடினார். அவர் பாடத் தொடங்கியதும் கருடன் காசியில் வட்டமடிக்கத் தொடங்கியது. குமரகுருபரர் கேட்ட இடத்தை அவருக்குக் கொடுத்து சிறப்புச் செய்தான். அந்த இடத்தில் அமைக்கப்பட்டதுதான் காசி குமாரசுவாமி மடம். அங்கு முகம்மதியரால் மறைக்கப்பெற்ற கேதாரலிங்கத்துக்குக் கோயில் கட்டி பூஜை செய்தார். அந்தக் காலத்தில், ‘காசித் துண்டி விநாயகர் பதிக’மும், ‘காசிக் கலம்பக’மும் இவரால் இயற்றப்பெற்ற நூல்கள்.
திருநறையூர் ஸ்ரீ ஆகாசமாரி
கௌரவ குலத்தினர் எனும் கவரைச் செட்டியார்கள் வெளியூர்களுக்குச் சென்று வளையல் வியாபாரம் செய்வது வழக்கம். அவ்வாறு அவர்கள் சமயபுரம் சென்றபோது, அவர்களில் ஒருவர் கனவில் சமயபுரத்தாள் இளம் பெண்ணாகத் தோன்றி வளையல் அணிவிக்கச் சொன்னாள். அவரும் அகமகிழ்ந்து வளையல் அணிவிக்க முயன்றார். ஆனால், வளையல்கள் உடைந்தனவே தவிர அணிவிக்க முடியவில்லை. உடனே கனவு கலைந்தது.
கனவில் உடைந்த வளையல்கள், நிஜத்திலும் உடைந்திருந்தது பார்த்து திகைத்தார். அவர் உடன் வந்தோருக்கெல்லாம் அம்மை நோயும் கண்டிருந்தது. ஒன்றுமே புரியாமல் குழம்பியிருந்தபோது, ஆகாயத்தில் காட்சி தந்தாள் அன்னை. வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்த வெள்ளிக்கிழமை சமயபுரத்தை விட்டு ஆகாய மார்க்கமாய் அவர்கள் ஊருக்கு வருவதாக அன்னை உறுதி கூறினாள். அவ்வண்ணமே ஆண்டுதோறும் இந்த தினத்தில், சமயபுரத்தாள், அலங்காரவல்லியாக காட்சி தருகிறாள். நல்ல கணவன் அமைய வேண்டி கன்னிப் பெண்கள் இந்த அன்னையைத் துதிக்கிறார்கள். கும்பகோணம்-பூந்தோட்டம் வழியில் 24 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
தளவாய்புரம் துர்க்கை
பொதுவாக சிவாலய கோஷ்டத்தில் தான் துர்க்கை காட்சி தருவாள். அபூர்வமாக சில தலங்களில் மூலவராக தனிக் கோயில் கொண்டிருப்பாள். அப்படிப்பட்ட ஒரு தலம் தான் தளவாய்புரம். துர்க்கை அம்மன் இங்கு நான்கு திருக்கரங்களுடன் கிழக்குத் திசை நோக்கி சாந்த சொரூபிணியாக வீற்றிருக்கிறாள். வியாபாரம் செழிக்கவும் குழந்தை பாக்கியத்திற்காகவும் பௌர்ணமி அன்று இங்கே பிரத்யங்கரா யாகம் நடைபெறுகிறது. யாகத்தில் கொட்டப்படும் மிளகாய் வற்றலால் சிறு கமறல் கூட இருக்காது என்பது அதிசயம்! இந்த யாகத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொள்கிறார்கள். மதுரை-திருநெல்வேலி ரயில் பாதையில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து கயத்தாறு செல்லும் பாதையில் பயணித்தால் தளவாய்புரத்தை அடையலாம்.
முத்தாலங்குறிச்சி குணவதியம்மன்
மதுரையைச் சேர்ந்த வணிகர் ஒருவரின் மனைவிக்கு தலைப் பிரசவத்திற்கான நேரம் வந்தது. பெண்ணின் தாய் வீட்டில் வசதியில்லை. வணிகக் கணவனும் மனைவியை திட்டித் தீர்த்தான். மனமுடைந்த கர்ப்பிணி தாமிரபரணிக் கரையோரமாக இலக்கில்லாது நடந்தாள். நாக்கு வறண்டது. பிரசவ வலி எடுத்தது. ‘‘அம்மா தாயே, என்னை காப்பாற்று’’ என்று கதறியபடி வீழ்ந்தாள். அங்கு வந்த வயதான பெண்மணி அவளை அள்ளிச் சென்று பிரசவம் பார்த்தாள். மனைவியைத் தேடி இந்தப் பக்கம் வந்தான் கணவன்.
அப்போது திடீரென ஒரு சிறுமி தோன்றி, ‘‘அதோ உன் மனைவி அங்கிருக்கிறாள்’’ என்று கூறி ஒரு குடிசையைக் காட்டினாள். உள்ளே குழந்தையோடு இருந்த மனைவியிடம் வந்து மன்னிப்பு கோரினான், கணவன். பிரசவம் செய்வித்த பெண்மணிக்காக நன்றி கூற காத்திருந்தனர் தம்பதியர். இரவும் வந்தது. அங்கேயே தூங்கினர். அவர்கள் கனவில் அந்தச் சிறு பெண் அம்பிகையாக வந்து, ‘‘நான் குணவதி அம்மன்’’ என்று தன் திருப்பெயரை கூறினாள்.
நல்ல பிள்ளை பெற உதவிய அம்மனை, ‘நல்ல பிள்ளை பெற்ற குணவதியம்மன்’ என்றே அழைத்தார்கள். இன்றும் சுகப்பிரசவம் ஆக வேண்டிக் கொண்டு, அது நிறைவேறியவர்கள், அப்படிப் பிறந்த குழந்தையோடு கோயிலுக்கு வந்து நன்றி தெரிவிப்பதைக் காணலாம். நெல்லை-திருச்செந்தூர் பிரதான சாலையில் செய்துங்கநல்லூர் என்னும் இடத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
கண்ணூர்பட்டி – ஆதி பராசக்தி
ஸ்ரீ பெரியாண்டவர் கோயில் மகிமை வாய்ந்த ஒரு சக்தி ஸ்தலம். இந்தக் கோயில் தமிழ்நாட்டில் சேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் என்னும் ஊரிலிருந்து கிழக்கு திசையில் சுமார் 2 மைல் தொலைவில் அமைந்திருக்கும் கண்ணூர்ப்பட்டி என்னும் அழகிய கிராமத்தில் உள்ளது. இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ அம்பாள் ஆதிபராசக்தியின் அம்சமாகும். இந்த அம்பாளுக்கு ‘ஸ்ரீ வனதுர்கா பரமேஸ்வரி’ என்றும் ‘ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி’ என்றும் பெயர்கள்.
ஆனால் வழக்கில் அனைவரும் அன்னையை ‘ஸ்ரீ பெரியாண்டவர்’ என்றே அழைக்கின்றனர். இக்கோயிலில் ஆதிபராசக்தி கடும் உக்ரமும் மஹா கோபமும் பொருந்தியவளாய் விளங்குகிறாள். தீய சக்திகளை நாசமாக்கிவிடும் பெரும் சக்தி கொண்ட தெய்வீக யந்த்ரங்கள் இந்தக் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. ஸ்ரீ பெரியாண்டவர் கோயில் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. வேறேங்குமே இம்மாதிரி அமைப்பும் தெய்வீக சக்தியும் கொண்ட கோயில் கிடையாது என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.
மத்தூர் ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி
மகிஷாசுரனை பராசக்தி வதம் செய்ய எடுத்த கோலம்தான் மகிஷாசுரமர்த்தினி. பல்வேறு தலங்களில் அருளும் இந்த அன்னை, மத்தூரிலும் விளங்குகிறாள். ரயில் பாதைக்காக தோண்டிய பள்ளத்திலிருந்து வெளிப்பட்ட பெரிய, அழகு சிற்ப வடிவினள். அஷ்டபுஷங்களோடு எந்தச் சிதைவுமின்றி ஏழடி உயர எழிற் கோலம்! எண் கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தியிருந்தாலும் திருமுகம் மட்டும் சாந்தமாக ஜொலிக்கிறது. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை களில் ராகுகால சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. பௌர்ணமியன்று 108 பால்குட அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் உண்டு. திருத்தணி-திருப்பதி சாலையில் திருத்தணியிலிருந்து 8 கி.மீ. தூரத்தில், பொன்பாடி ரயில் நிலையத்திற்கு அருகே 2 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
ராதாகிருஷ்ணன்
The post அம்மனின் அழகு தரிசனம் appeared first on Dinakaran.