வயநாடு : கேரள மாநிலம் வயநாட்டில் சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய இடங்களை நிலச்சரிவு புரட்டிப்போட்டது. இந்த நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கிய 1000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கிய 298 பேரின் நிலைமை குறித்து இதுவரை தகவல் இல்லை. 4வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்கிறது. இதனிடையே ராணுவத்தினர் தேடுதல் பணியில் இஸ்ரோவும் இணைந்துள்ளது. அதிநவீன தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது ராணுவம். அதே வேளை நிலச்சரிவு ஏற்பட்ட மலைப் பகுதியில், RISAT SAR தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படமாக எடுத்து அதன் முழு தகவல்களையும் ராணுவத்திற்கு வழங்கி வருகிறது. இஸ்ரோ அளித்த தகவலின்படி கடந்த முறை ஏற்பட்ட நிலச்சரிவை விட இது பல மடங்கு பெரிய நிலச்சரிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலச் சரிவு ஆரம்ப புள்ளியில் இருந்து 8 கி.மீ. பயணித்து முடிந்திருக்கிறது என இஸ்ரோ கண்டறிந்துள்ளது.
இந்த நிலையில், நிலச்சரிவு குறித்து விஞ்ஞானிகள், நிபுணர்கள் நேரில் ஆய்வு செய்ய கேரள தலைமைச் செயலாளர் நேற்று தடை விதித்திருந்தார்.வதந்திகள் பரவுவதை தடுப்பதற்கும் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காகவும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த உத்தரவிற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. நிலச்சரிவு தொடர்பான விவரங்களை மறைக்க கேரள அரசு முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை விஞ்ஞானிகள் ஆய்வுசெய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்க முதலமைச்சர் பினராயி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில், ‛‛உத்தரவை அதிகாரிகள் உடனடியாக திரும்ப பெற வேண்டும். இதனை தலைமை செயலாளரை உறுதி செய்ய வேண்டும்” என்றார்.இதையடுத்து கேரள தலைமை செயலாளர், ‛‛மாநில அறிவியல் ஆய்வுகள் மற்றும் நுண்ணறிவுகளை வழங்குவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தவறான தகவல் பரவுவதை தடுக்கவும், மீட்பு நடவடிக்கையில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்க தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” என தெரிவித்து உத்தரவை வாபஸ் பெற்றார்.
The post வயநாட்டில் ராணுவத்துடன் கைக்கோர்த்த இஸ்ரோ : நிலச்சரிவு குறித்து விஞ்ஞானிகள், நிபுணர்கள் நேரில் ஆய்வு செய்ய கேரள அரசு அனுமதி!! appeared first on Dinakaran.