×

குடியாத்தம் அருகே ஆபத்தான நிலையில் சடலத்துடன் ஆற்றை கடக்கும் கிராமமக்கள்: வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச்சென்றதால் வேதனை

குடியாத்தம்: தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் ஆபத்தான நிலையில் ஆற்று தண்ணீரில் சடலத்துடன் கிராம மக்கள் கடக்கின்றனர். தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த தொடர் கனமழை காரணமாக ஏரி, குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன. மேலும் ஆறுகளிலும் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த தரைப்பாலங்கள் பல இடங்களில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டண்ய மகாநதி ஆற்றின் கிளை ஆறான கொட்டாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதன்காரணமாக சூராளூர்  கிராமத்தில் ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது. இதனால் சூராளூர், பெரியதம்பியூர், வெள்ளேரி, ஆத்தோரம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டிற்கு தற்போது பாதை வசதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்த கிராமங்களில் வசித்து வந்த 5க்கும் மேற்பட்டோர்,  உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக அடுத்தடுத்து இறந்தனர். அவர்களது சடலங்களை ஆற்று வெள்ளத்தில் இறங்கி மறு கரையில் உள்ள மயானத்திற்கு எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இதேபோல் நேற்றும் அப்பகுதியை சேர்ந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் உடல் நலக்குறைவால் இறந்தார்.இதனால் கிராம மக்கள் சடலத்துடன் ஆற்றில் இறங்கிச்சென்று மயானத்தில் இறுதிச்சடங்கு நடத்திவிட்டு திரும்பினர். வெள்ளத்தில் இறங்கி செல்லவேண்டிய நிலை இருப்பதால் சடலத்தை எடுத்துச்செல்ல அப்பகுதி மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். எனவே இப்பிரச்ைனக்கு தீர்வு காணும் வகையில், வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதற்கு மாற்றாக விரைவில் தரைப்பாலம் அமைக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post குடியாத்தம் அருகே ஆபத்தான நிலையில் சடலத்துடன் ஆற்றை கடக்கும் கிராமமக்கள்: வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச்சென்றதால் வேதனை appeared first on Dinakaran.

Tags : Kudiatham ,Gudiatham ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து