×
Saravana Stores

பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் நிஷாந்த் தேவ் கால் இறுதிக்கு தகுதி: துப்பாக்கி சுடுதலில் ஸ்வப்னில் பதக்கம் வெல்வாரா?

பாரிஸ்: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 33வது ஒலிம்பிக் பாரிசில் நடந்து வருகிறது. இதில் 5வது நாளான நேற்று இந்திய வீரர்கள், பேட்மிண்டன், குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், வில்வித்தை உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர். துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் தகுதி சுற்றில் 7வது இடம் பிடித்த ஸ்வப்னில் குசலே இறுதி சுற்றுக்குள் நுழைந்தார். இன்று மதியம் 1 மணிக்கு இறுதி சுற்றில் ஸ்வப்னில் களம் இறங்குவதால் இந்தியாவுக்கு 3வது பதக்கம் பெற்று தருவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மகளிர் குத்துச்சண்டையில் 75 கிலோ எடை பிரிவில் லவ்லினா போர்கோஹைன், நார்வேயின் சுனி
வாவை 5-0 என வென்று கால்இறுதிக்குள் நுழைந்தார். வரும் 4ம் தேதி சீனாவின் லிக்வின் உடனான காலிறுதி போட்டியில் லவ்லினா விளையாட உள்ளார். பேட்மிண்டனில் ஆடவர் இரட்டையரில் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி கால்இறுதி சுற்றுக்குத் தகுதிபெற்றது.

கடந்த முறை வெண்கல பதக்கம் வென்ற மலேசியாவின் ஆரோன் சியா -சோ வூய் யிக்குடன் கால்இறுதியில் இன்று மாலை 4.30 மணிக்கு மோதுகின்றனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் ரவுன்ட் 16 சுற்றில் பிவி சிந்து(13வது ரேங்க்) இன்று இரவு 10 மணிக்கு 8வது இடத்தில் உள்ள சீனாவின் பிங்ஜியாவ்வுடன் மோதுகிறார். ஆடவர் ஒற்றையர் ரவுன்ட் 16 சுற்றில் இந்தியாவின் லக்‌ஷயாசென்-எச்.எஸ்.பிரனாய் மோதுகின்றனர். இந்த போட்டி இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. 2 இந்திய வீரர்கள் நேருக்குநேர் மோதுவது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும், கால்இறுதிக்கு ஒரு இந்தியர் நுழைவது நல்ல செய்தி. ஆடவர் ஹாக்கியில் பி பிரிவில் இந்தியா மதியம் 1.30 மணிக்கு பலம் வாய்ந்த பெல்ஜியத்துடன் மோதுகிறது. குத்துச்சண்டையில் 71 கிலோ எடை பிரிவில் நேற்றிரவு இந்தியாவின் நிஷாந்த்தேவ், ஈக்வடாரின் ஜோஸ் கேப்ரியல் ரோட்ரிக்ஸ் டெனோரியோவுடன் மோதினார்.

இதில் 3-2 என்ற கணக்கில் நிஷாந்த் தேவ் வெற்றிபெற்று கால்இறுதிக்குள் நுழைந்தார். வரும் 4ம் தேதி கால்இறுதியில், மெக்சிகோவின் மார்கோ வெர்டேவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார். ஆண்கள் வில்வித்தையில் தனிநபர் பிரிவில் பிரவின் ஜாவ் மதியம் 2.31 மணிக்கு சீனாவின் காவ்வென்சாவ்வுடன் மோதுகிறார். மகளிர் குத்துச்சண்டை ஃப்ளைவெயிட் ரவுன்ட் 16 சுற்றில் நிகாத் ஜரீன் மதியம் 2.30 மணிக்கு சீனாவின் யு வு வை எதிர்கொள்கிறார். 5ம் நாள் முடிவில் சீனா 9 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என 19 பதக்கத்துடன் முதலிடத்தில் உள்ளது. பிரான்ஸ் 8 தங்கம், 10 வெள்ளி, 8 வெண்கலம் என 26, ஜப்பான் 8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என 15, ஆஸ்திரேலியா 7 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 16, இங்கிலாந்து 6 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 17 பதக்கத்துடன் முதல் 5 இடத்தில் உள்ளன. இந்தியா 2 வெண்கல பதக்கத்துடன் 38வது இடத்தில் உள்ளது.

 

The post பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் நிஷாந்த் தேவ் கால் இறுதிக்கு தகுதி: துப்பாக்கி சுடுதலில் ஸ்வப்னில் பதக்கம் வெல்வாரா? appeared first on Dinakaran.

Tags : Nishant Dev ,Paris Olympics ,Swapnil ,Paris ,33rd ,Olympics ,Will Swapnil ,
× RELATED செஸ் விளையாட்டுக்கு முக்கியத்துவம்...