சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் 3.8.2024 அன்று அவர் திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் 3.8.2024 அன்று காலை 9.00 மணியளவில் சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்படும் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள். தீரன் சின்னமலை அவர்கள் ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் தீர்த்தகிரி. தீரன் சின்னமலை அவர்கள் இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள்பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து சிறந்த இளம் வீரராகத் திகழ்ந்தார்.
பல்வேறு துணிச்சலான போர்க்கலைகளைக் கற்றுத் தேர்ந்து, போர் யுக்திகளைத் தனது படைகளுக்குக் கற்றுத்தந்தார். இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று ஆங்கிலேயர்களுக்குச் சவால் விட்டு அவர்களின் கிழக்கிந்தியக் கம்பெனியை அடியோடு ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டார். ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை மீட்டெடுக்க மைசூர் மன்னன் திப்பு சுல்தான் உடன் இணைந்து செயல்பட்டார். கொங்கு மண்ணில், அன்றைய மைசூர் அரசு வசூலித்த வரியைத் தடுத்து “சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை” என்று பெயர் பெற்றார்.
மைசூரில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற மூன்று போர்களிலும் திப்பு சுல்தான் – தீரன் சின்னமலை கூட்டணி வெற்றியடைந்ததைக் கண்டு வெகுண்டெழுந்த ஆங்கிலேயர்கள் பல புதிய போர் யுக்திகளைக் கையாளத் திட்டம் தீட்டினர். திப்பு சுல்தான் மாவீரன் நெப்போலியனிடம் நான்காம் மைசூர்ப் போரில் தங்களுக்கு உதவி புரியக் கோரி தூது அனுப்பினார். என்னதான் நெப்போலியன் உதவி புரிந்தாலும், தங்களது படைகளோடு துணிச்சலுடனும் வீரத்துடனும் திப்பு சுல்தானும் சின்னமலையும் அயராது போரிட்டனர். மைசூர் மன்னர் திப்பு சுல்தான் நான்காம் மைசூர்ப் போரில் போர்க்களத்திலேயே வீரமரணமடைந்தார்.
அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற பல போர்களில் தோல்வியடைந்த ஆங்கிலேயர்கள் கோபமடைந்து தீரன் சின்னமலையைச் சூழ்ச்சி செய்து அவரையும், அவரது சகோதரர்களையும் ஆங்கிலேயர்கள் கைது செய்து சங்ககிரிக் கோட்டையில் தூக்கிலிட்டனர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில் சென்னை, கிண்டியில் முழு உருவச் சிலையினை அமைத்து 4.10.1998 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பொற்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் சார்பில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாண்புமிகு மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சீர்மிகு பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் 3.8.2024 அன்று அவர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.