மதுரை: மத மோதலை தூண்டும் வகையில் முகநூலில் பதிவிட மாட்டேன் என மன்னிப்பு கோரி, முகநூலில் பதிவிட வேண்டுமென பாஜ நிர்வாகிக்கு ஐகோர்ட் கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையைச் சேர்ந்த பாஜ நிர்வாகி குருஜி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், இஸ்லாமிய மத தூதர்களை தவறாக சித்தரித்து, மதக்கலவரத்தை தூண்டும் விதமாக முகநூலில் பதிவுகளை வெளியிட்டதாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறேன். நான் அதுபோன்ற பதிவுகள் எதையும் சமூக வலைத்தளத்தில் பதிவிடவில்லை.
எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் நேற்று விசாரித்து, மத மோதல்களை தூண்டும்விதமாக முகநூலில் பதிவிட்டதால், அவரது முகநூல் பக்கத்திலேயே இதுபோன்று தவறாக பதிவுகளை பதிவிட மாட்டேன் என, மன்னிப்பு கோரி பதிவிட வேண்டும். தஞ்சாவூரில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
The post மதமோதலை தூண்டிய விவகாரம்; முகநூலில் பாஜ நிர்வாகி மன்னிப்பு கேட்கனும்: ஐகோர்ட் appeared first on Dinakaran.