×

சீனா பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்: முதல்வருக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம்


சென்னை: தமிழகத்தில் சீனா பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என்று முதல்வருக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று முன்தினம் எழுதியுள்ள கடிதம்: விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் தீப்பெட்டி உற்பத்தி தொழில் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது. கடந்த காலத்தில் வெளிநாட்டு தீப்பெட்டிகள் மற்றும் சீனா பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதி காரணமாக தீப்பெட்டி உற்பத்தி தொழில் கடுமையாக பாதித்தது.

இதைத்தொடர்ந்து சீனா பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு 8.9.2022 அன்று தாங்கள் கடிதம் எழுதினீர்கள். இதன் விளைவாக சீனா பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. மேலும், வெளிநாட்டு தீப்பெட்டி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டது. தற்போது சீனா பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், வடநாட்டு கம்பெனிகள் அதை தயாரிக்கும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்து சிகரெட் லைட்டர்களை தயாரித்து ரூ8 முதல் ரூ10க்கு விற்பனை செய்கிறார்கள். இதனால் மீண்டும் தங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த சூழலில் அந்தமான் நிகோபார் தீவில் சுற்றுச்சூழல் விதிகளின் கீழ் பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் விற்பனையையும் தடை செய்து அறிவிப்பாணை வெளியிட்டுள்ளனர். அதேபோல், தமிழ்நாட்டிலும் அறிவிப்பாணை வெளியிட்டால் தீப்பெட்டி தொழிலுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதை பரிசீலித்து ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post சீனா பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும்: முதல்வருக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் appeared first on Dinakaran.

Tags : China ,Speaker ,Chennai ,Tamil Nadu ,Speaker of the ,Tamil Nadu Assembly ,MLA ,Padav Mahalvar ,M.U. K. ,Multinam ,Stalin ,Dad ,Dinakaran ,
× RELATED உலகின் மிகப்பெரிய உட்புற ஸ்கை ரிசார்ட் சீனாவில் திறப்பு!!