×

வயநாடு நிலச்சரிவில் சிக்கி கூடலூர் வாலிபர், பந்தலூர் பூசாரி பரிதாப மரணம்: நீலகிரியில் இருந்து மருத்துவ மற்றும் மீட்பு குழு விரைந்தது

கூடலூர்: வயநாடு நிலச்சரிவில் கூடலூரை சேர்ந்த வாலிபர், பந்தலூரை சேர்ந்த கோயில் பூசாரி ஆகியோர் பலியாகினர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட முண்டக்கை மற்றும் சூரல் மலைப்பகுதிகளில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூர் கள்ளிக்கோட்டை சாலையில் உள்ள மரப்பாலம் பகுதியை அடுத்துள்ள அட்டிக்குழி பகுதியை சேர்ந்த காளிதாஸ் (32) என்பவரும் உயிரிழந்தார்.

கட்டிட வேலை செய்துவந்த இவர் கடந்த வாரம் வயநாடு பகுதியில் உள்ள தனது பாட்டியின் வீட்டுக்கு சென்று அங்கு தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். இந்நிலையில்தான் நேற்று அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இவரும் உயிரிழந்துள்ளார். இவரது உடல் மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது. கட்டிட வேலைக்கு சென்றவர் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல, பந்தலூர் அருகே அய்யன்கொல்லி பகுதியை கல்யாணக்குமார் (53), மேப்பாடி சூரல்மலை பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் பூசாரியாக இருந்தார். அவர் கோயில் வளாகத்திலேயே தங்கி இருந்தார். இந்நிலையில் அவர் நிலச்சரிவில் அடித்துச்செல்லப்பட்டு பலியாகியுள்ளார்.

குழு விரைந்தது: நிலச்சரிவில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஊட்டியில் இருந்து இரு மருத்துவ குழுவினர் விரைந்துள்ளனர். மருத்துவர் அருள் தலைமையில் ஒரு குழுவும், ரஞ்சித் தலைமையில் மற்றொரு குழுவும் விரைந்துள்ளது. இந்த குழுவில் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் என 10 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க உள்ளனர். இதேபோல முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நீலகிரியில் இருந்து 20 பேர் கொண்ட மீட்பு குழுவும் அங்கு விரைந்துள்ளது.

* உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா 2 கிராமம், மரப்பாலம், அட்டிக்கொல்லி பகுதியைச் சேர்ந்த திரு.காளிதாஸ் (வயது 34) என்பவர் கட்டுமான பணிக்காக கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டக்கை சூரல்மலைக்கு சென்றிருந்தார். அப்போது நேற்று (30ம் தேதி) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த காளிதாஸ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த இயற்கை பேரிடரில் சிக்கி உயிரிழந்த காளிதாஸ் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வயநாடு நிலச்சரிவில் சிக்கி கூடலூர் வாலிபர், பந்தலூர் பூசாரி பரிதாப மரணம்: நீலகிரியில் இருந்து மருத்துவ மற்றும் மீட்பு குழு விரைந்தது appeared first on Dinakaran.

Tags : Kudalur ,Bandalur ,Wayanad ,Nilgiris ,Mundakai ,Sural hills ,Meppadi ,Wayanad district ,Kerala ,Gudalur ,Dinakaran ,
× RELATED கேரளா வயநாட்டில் நிலச்சரிவில்...