×

திருச்சுழி தொகுதி விவசாயிகளின் கனவு திட்டங்களை நனவாக்கியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் தங்கம்தென்னரசு பேச்சு

காரியாபட்டி, ஜூலை 31: காரியாபட்டி வட்டம் சென்னம்பட்டி வலது பிரதான கால்வாய் பகுதியில் ஓடையின் குறுக்கே தடுப்பு பகிர்மான கட்டடம் கட்டி பாசனநீர் வழங்குதல் மற்றும் சென்னம்பட்டி வலது பிரதான கால்வாய்களை புனரமைத்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னம்பட்டி வலது கால்வாய் மூலம் பயன்பெறும் கண்மாய்கள் மற்றும் கிராமங்கள் அனைத்தும் மல்லாங்கிணறு பிர்க்காவில் உள்ளது. இப்பணிகளை நிதியமைச்சர் தங்கம்தென்னரசு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் தங்கம்தென்னரசு கூறுகையில், ‘‘இத்திட்டப் பணிகளை செயல்படுத்தியதன் மூலம் காரியாபட்டி வட்டம் மல்லாங்கிணறு பிர்க்காவை சேர்ந்த வையம்பட்டி கிராமம், நந்திக்குண்டு கிராமம், மல்லாங்கிணறு கிராமம், முடியனூர் கிராமம், திம்மன்பட்டி கிராமம், சந்திரன்குளம் கிராமம், தோணுகால் கிராமம், தண்டியனேந்தல் கிராமம் மற்றும் வலையன்குளம் கிராமம் மற்றும் இக்கிராமங்களைச் சேர்ந்த 9 கண்மாய்கள் பாசனநீர் பெற்று பயனடைந்து அதிக பயிர் மகசூல்பெறும்.

மேலும், இப்பணிகள் மூலம் கண்மாய்களுக்கு தங்குதடையின்றி தண்ணீர் வழங்கும் நிலையில் அப்பகுதிகளில் உள்ள கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். சென்னம்பட்டி கால்வாய் திட்டத்தில் தெற்குஓடையில் வீணாக வெளியேறிய 218 கனஅடி தண்ணீரை வலதுபுற கால்வாய் வழியாக திருப்பி விட்டால், மல்லாங்கிணறு பகுதியில் உள்ள 9 கண்மாய்கள் நிறைந்து, 750 ஏக்கர் வரை பாசன வசதி பெறும். இங்கு அணைகட்ட ரூ.15 கோடியே 78 லட்சத்து 30 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பொழுது இப்பகுதியில் உள்ள அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மக்களின் ஜீவாதார திட்டமாகவும், 50 ஆண்டு கனவு திட்டமாகவும் இருந்தது. அதேபோல் நிலையூர் கம்பிக்குடி கால்வாய் வழியாக கூடுதலாக பல்வேறு கண்மாய்களுக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் கால்வாய் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, விரைவில் பணி தொடங்க உள்ளது.

கிருதுமால் நதி வழியாக நரிக்குடி பகுதிக்கு 3 முறை வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு, அப்பகுதி கண்மாய்கள் நிறைந்தன. திருச்சுழி தொகுதியில் விவசாய மக்களின் நீண்ட கால கனவு திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி கொடுத்துள்ளார்’’ என்று தெரிவித்தார். ஆய்வின்போது ஒன்றிய செயலாளர் கண்ணன், பேரூராட்சி தலைவர்கள் செந்தில், துளசிதாஸ், மாaவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஜெயச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, மாவட்ட கழக பொருளாளர் வேலுச்சாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திருச்சுழி தொகுதி விவசாயிகளின் கனவு திட்டங்களை நனவாக்கியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் தங்கம்தென்னரசு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Thiruchuzhi ,Minister ,Thangamthennarasu ,Kariyapatti ,Chennampatti ,Thiruchuzhi block ,
× RELATED தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு நாள்...