கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறை வட்டாரத்தில் கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் தென்மேற்குப் பருவமழை பரவவாக பெய்து வருகிறது. கடந்த ஒருவாரமாக இடைவிடாமல் மழை பெய்துவந்த நிலையில் அதிகாலையில் கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து வால்பாறையிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று காலை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை முதலே வால்பாறையில் கனமழை பெய்து வருவதை அடுத்து பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் மீது மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் மின்தடையும் நிலவி வருகிறது.
இந்நிலையில் பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் இருந்து சோலையார் அணை இடது கரை செல்லும் பகுதியில் அமைந்துள்ள முத்து என்கின்ற ராஜேஸ்வரி என்பவருக்கு சொந்தமான மண்சுவர் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக அதிகாலை ஏற்பட்ட மண் சரிவில் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி மற்றும் 10-ம் வகுப்பு படித்து வந்த அவரது பேத்தி தனபிரியா (14) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனை அடுத்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கி இருந்த உடலை மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேக்கல் முடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post தொடர் கனமழையால் வால்பாறையில் சோலையார் அணை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி appeared first on Dinakaran.