ஜெயங்கொண்டம், ஜூலை 30: ஜெயங்கொண்டத்தில் கட்டுமான பொருட்கள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் நெடுமாறன் (50). இவர் கட்டுமான பணிகளை செய்து வருகிறார். கரடிகுளம் பகுதியில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே நடைபெறும் ஒரு கட்டிட வேலைக்காக இரும்பு உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் மற்றும் தளவாடப் பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் கட்டிட வேலைக்காக வைக்கப்பட்டிருந்த இரும்பு உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் மற்றும் தளவாடப் பொருட்களை லோடு ஆட்டோவில் திருடி சென்றதை பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் நெடுமாறனுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து நெடுமாறன் வருவதற்குள் மர்ம நபர்கள் பொருட்களுடன் தப்பி விட்டனர்.
இதுகுறித்து நெடுமாறன் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். நேற்று கரடிகுளம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி விசாரித்த போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் வாகனத்துடன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்த போது, கட்டுமான பொருட்களை திருடியதை ஒப்புக் கொண்டனர். மேலும் விசாரணையில் அவர்கள் கரடிகுளம் கிராமம் வாண்டையார் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் தர்மதுரை (41), கரடிகுளம் காலனித் தெருவை சேர்ந்த அய்யாவு மகன் கார்த்திக் (40), அம்பேத்கர் நகர் வடக்கு தெருவை சேர்ந்த அம்பிகாபதி மகன் மணிமாறன் (35), ஜெயங்கொண்டம் ஜெகநாதன் மகன் ராஜா (39) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தர்மதுரை, கார்த்திக், மணிமாறன், ராஜா உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்து லோடு வாகனம் மற்றும் 400 கிலோ எடையுள்ள இரும்பு உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் உள்ளிட்ட தளவாட பொருட்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
The post குடிநீர் தொட்டி மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் ஜெயங்கொண்டத்தில் கட்டுமான பொருட்கள் திருடிய 4 பேர் கைது appeared first on Dinakaran.