சிவகங்கை, ஜூலை 30: சிவகங்கையில் இருந்து பொன்னாம்பட்டி செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனைச் சீரமைக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கையில் இருந்து ஆர்டிஓ மைதானம் வழியாக பொன்னாம்பட்டி செல்லும் சாலை உள்ளது. சுமார் 3 கி.மீ தூரம் உள்ள இச்சாலையை இலுப்பக்குடி, ஆனைமாவளி, வஸ்தபாட்டி, அரசினிப்பட்டி, பொன்னாம்பட்டி, சூரக்குளம் புதுக்கோட்டை உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அலுவலர்கள் தினந்தோறும் இச்சாலை வழியே தான் சிவகங்கை வந்து செல்கின்றனர். சிவகங்கை கலெக்டர் அலுவலகப் பகுதியில் வந்து இணையும் வகையில் உள்ள இச்சாலையில் இப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களும் வந்து செல்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இச்சாலை அதன் பிறகு எவ்வித பராமரிப்பும் இல்லாமல் குண்டும், குழியுமாய் உள்ளது.
சாலையின் மேற்பகுதியில் சாலை போட பயன்படுத்தப்பட்ட கற்கள் அதிக அளவில் உள்ளதால் வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆகையால் இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொன்னாம்பட்டி கிராமத்தினர் கூறியதாவது: சிவகங்கை நகர்ப்பகுதியை ஒட்டியுள்ள இச்சாலை காளையார்கோவில் யூனியன் கட்டுப்பாட்டில் உள்ளது.
சிவகங்கை நகரில் இருந்து செல்லும் முக்கியமான இச்சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முற்றிலும் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தாலும் பராமரிப்பு கூட செய்யப்படவில்லை. தற்போது காஞ்சிரங்கால் பகுதியில் இருந்து போடப்பட்டு வரும் சுற்றுச்சாலையில் இச்சாலை இணைவதால் மேலும் அதிகமானோர் இச்சாலையை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. 3 கி.மீ சாலையை கடக்க அரை மணி நேரத்திற்கும் மேல் ஆகிறது. எனவே விரைந்து புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
The post சிவகங்கை அருகே பொன்னாம்பட்டியில் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.