×
Saravana Stores

மீண்டும் சாலையில் உலா வந்த ஒற்றை தந்த யானை; வேலூர் மாவட்ட எல்லைக்குள் நுழைந்தது: அலறியடித்து ஓட்டம் பிடித்த வாகன ஓட்டிகள்

ஒடுகத்தூர், ஜூலை 30: ஆம்பூர் வனப்பகுதியில் இருந்து மீண்டும் வேலூர் மாவட்ட எல்லைக்குள் நுழைந்த ஒற்றை தந்த யானை, சாலையில் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சாணாங்குப்பம் காப்புக்காடு, மாதனூர், உடைய ராஜாபாளையம், உள்ளி, கீழ்முருங்கை ஆகிய பகுதிகளில் கடந்த 13ம் தேதி டஸ்கர் என்ற ஒற்றை தந்தம் கொண்ட யானை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், ஆம்பூர் வனத்துறையினர் அதனை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதேபோல், யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனமோதல் தடுப்பு சிறப்பு பிரிவினரும் யானையை கண்காணித்து அதன் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர்.

தொடர்ந்து, பாலூர் பகுதியில் உள்ள வேலூர் மாவட்ட எல்லையோரம் சுற்றித்திரிந்த யானை ஒடுகத்தூர் அடுத்த குருவராஜபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலபாடி மலை மீதுள்ள தர்ம கொண்டராஜா கோயில் அருகே கடந்த 16ம் தேதி சென்றது. அங்கு, கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த அரிசி மூட்டைகளை சாப்பிட்டு விட்டு அங்கு கோயிலை ஒட்டியவாறு அமைக்கப்பட்டிருந்த தகரத்தாலான கொட்டகையை தும்பிக்கையால் அடித்து உடைத்து சேதப்படுத்தியது. பின்னர், அங்கிருந்து அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்று விட்டது. மேலும், யானை சென்ற வழித்தடங்களை பின் தொடர்ந்து பார்த்தபோது காட்டுக்கு நடுவே செல்லும் கானாற்று ஓடையில் தண்ணீர் குடித்ததற்கான அடையாளங்கள் தென்பட்டது. இருந்தபோதிலும் யானை அங்கு இல்லை. தொடர்ந்து, கடந்த 21ம் தேதி ஆம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பனங்காட்டேரி வனப்பகுதியில் ஒற்றை தந்த யானை சுற்றித்திரிந்தது.

இதனை வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். பின்னர், கடந்த 8 நாட்களாக யானை தென்படவும் இல்லை, அதன் இருப்பிடத்திற்கும் சென்று சேரவில்லை என்று வனத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், ஒடுகத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆசனாம்பட்டு வனப்பகுதியில் நேற்று பகல் ஒற்றை தந்த யானையின் நடமாட்டம் தென்பட்டது. மேலும், யானை ஒடுகத்தூர்- ஆலங்காயம் செல்லும் சாலையின் நடுவே உலா வந்தது. இதனை பார்த்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு யானை செல்லும் வரை காத்திருந்தனர். இதனால் இருபுறமும் வாகனங்கள் வரிசைகட்டி நின்றது. மேலும், ஒரு சிலர் யானை வருவதை கண்டு அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால், அங்கு சற்று பரபரப்பான சூழல் நிலவியது.

இதுகுறித்து, தகவலறிந்த ஒடுகத்தூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையின் நடமாட்டம் குறித்து நோட்டமிட்டனர். பின்னர், சிறிது நேரத்திலேயே யானை ஆசனாம்பட்டு பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது. அதனை பின் தொடர்ந்த வனத்துறையினரும் அதனை தீவிரமாக கண்காணித்து வந்தனர். ஆனால், அடர்ந்த வனப்பகுதி என்பதாலும், இரவு நேரம் என்பதாலும் கண்காணிக்கும் பணி சற்று தள்ளிவைக்கப்படுள்ளது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், வனப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை தந்தம் கொண்ட யானை தற்போது அதன் இருப்பிடம் நோக்கி நகர ஆரம்பித்து விட்டது. நாளைக்குள் (இன்று) ஆலங்காயம் வனப்பகுதிகுள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி, சென்று விட்டால் விரைவில் யானை அதன் இருப்பிடமான ஜமுனாமரத்தூர் நோக்கி சென்று விடும். ஏற்கனவே பொதுமக்களுக்கு யானை நடமாட்டம் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தி உள்ளோம். பொதுமக்கள் யாரும் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை. இருந்த போதிலும், பொதுமக்கள், வாகனம் ஓட்டுபவர்கள், பட்டா நிலங்களில் குடியிருப்போர் என யாரும் இரவு நேரங்களில் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல், யானையின் அருகே சென்று அதற்கு உணவு அளிப்பதும், செல்போனில் போட்டோ எடுப்பதும் தவிர்க்க வேண்டும் என்றனர்.

The post மீண்டும் சாலையில் உலா வந்த ஒற்றை தந்த யானை; வேலூர் மாவட்ட எல்லைக்குள் நுழைந்தது: அலறியடித்து ஓட்டம் பிடித்த வாகன ஓட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Odugathur ,Vellore district ,Ambur forest ,Tirupattur district ,Chananguppam ,Dinakaran ,
× RELATED நரிக்குறவர்கள் குடும்பத்தை...