×

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்


சென்னை: சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலைப் பணிகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்த திட்டங்களை முழுமையாக விரைந்து செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுடன் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக முடிக்கப்பட வேண்டிய திட்டப்பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்வளத்துறையின் சார்பில் ஏரிகள் மற்றும் குளங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துறையின் சார்பில் அதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் 95% முடிவடைந்துள்ளது. இன்னும் 15 நாட்களில் இந்தப் பணிகள் முடிவுறும். சில இடங்களில் இருந்த சிரமங்கள் நிவர்த்தி செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதிகளில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் 70 முதல் 80% பணிகள் முடிவடைந்துள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காவண்ணம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் காணப்படும் ஆகாயத்தாமரை மற்றும் கழிவுகளை அகற்றி, தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப் பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணித்து, இந்த மாத இறுதிக்குள் பணியினை முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் கழிவுநீர் கட்டமைப்புகள், கழிப்பிடங்கள், பழுதடைந்த தெருமின்விளக்குகளை மாற்றியமைத்தல் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கான பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓட்டேரி நல்லா கால்வாய் பகுதிகளில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் காரணமாகவும், கணேசபுரம் சுரங்கப்பாதையில் ரயில்வே நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளின் காரணமாகவும் மழைநீர் வெளியேற்றுவதற்கு சிரமங்கள் உள்ளதை சீர்செய்யும் வகையில் உரிய நடவடிகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைத்து சுரங்கப் பாதைகளிலும் மழைநீர் தேங்காவண்ணம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீர்வளத்துறையின் சார்பில் ஓட்டேரி நல்லா கால்வாயில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பில் பணிகள் நடைபெறும் இடங்களில் மழைநீர் தேங்காவண்ணம் அந்நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைநீர் வெளியேற்ற சிரமம் ஏற்படும் இடங்களில் மோட்டார் பம்புகள் மூலம் மழைநீரினை வெளியேற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சராசரியாக பெய்யும் 20 செ.மீ. அளவிலான மழைப்பொழிவினை எதிர்கொள்ளும் வகையில் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. எதிர்பாராத விதமாக 40 செ.மீ. முதல் 50 செ.மீ. வரையிலான கனமழை ஒரேநேரத்தில் அதிகளவில் பெய்யும் பொழுது, தேங்கும் மழைநீர் ஓரிரு நாட்களில் வடிந்து சென்று விடும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஒரேநேரத்தில் 60 முதல் 70 செ.மீ. மழைப்பொழிவு ஏற்பட்டக் காரணத்தினால் மழைநீர்த்தேக்கம் ஏற்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் 7 நாட்களுக்குள் மின்விநியோகம் வழங்கப்பட்டது. 128 இடங்களில் உடைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் சீர்செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 9,643 புதிய சாலைப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 595 சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது. 528 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தப் பணிகள் அனைத்தும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்கப்படும். வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் சாலைகளில் காணப்படும் பள்ளம் மற்றும் மேடுகள் உடனடியாக சரிசெய்யப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

The post சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகள் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்: அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Minister KN Nehru ,Chennai ,Minister ,KN Nehru ,Municipal Administration ,
× RELATED வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு...