×

வாலாஜா- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல்

வாலாஜாபாத்: வாலாஜா- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலைப் பணிகளை கைவிட்ட ஒப்பந்ததாரர்களை அழைத்துப் பேசி 6 மாதங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச் சாலையாக அமைக்கப்பட்ட நிலையில், சென்னை மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான 93 கி.மீ நீளச் சாலை 4 வழிப்பாதையாகவும், அதிக விபத்துகள் நிகழும் சாலையாகவும் உள்ளது.

இச்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்கும் திட்டம் 2014ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு ஒப்பந்தங்கள் விடப்பட்டு, 2018ம் ஆண்டின் இறுதியில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. அடுத்த 3 ஆண்டுகளில் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டு, 2021ம் ஆண்டில் போக்குவரத்துக்கு சாலை திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 6 ஆண்டுகள் நிறைவடைந்தும் கூட பணிகள் இன்னும் முடிவடையவில்லை.

மொத்தம் 98 கி.மீ. நீள சாலையில், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான 23 கி.மீ நீள சாலை விரிவாக்கப் பணிகள் முடிவடைந்துவிட்டன. மீதமுள்ள 70 கி.மீ நீள சாலையில், காரைப்பேட்டை முதல் வாலாஜா வரையிலான 36 கி.மீ நீளத்திற்கான பணிகள் 75 சதவீதம் நிறைவடைந்து விட்டன. மீதமுள்ள பணிகளும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிறைவடைந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், காரைப் பேட்டை -ஸ்ரீபெரும்புதூர் இடையிலான பணிகள் இதுவரை 57 சதவீதம் மட்டுமே நிறைவடைந்திருக்கும் சூழலில்தான் சாலை விரிவாக்கப் பணிகள் ஒப்பந்ததாரரால் முன்னறிவிப்பின்றி கைவிடப்பட்டிருக்கின்றன.

நெடுஞ்சாலை கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான நிலக்கரி சாம்பல் இலவசமாக கிடைக்காததுதான் திட்டப்பணிகள் கைவிடப்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும், தமிழ்நாடு அரசும் இந்தத் திட்டப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களை அழைத்துப் பேசி சாலை விரிவாக்கப் பணிகளை விரைவுபடுத்தி, அதிகபட்சமாக அடுத்த 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அதுவரை அந்த சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதையும் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post வாலாஜா- ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Walaja ,- Sriprahumutur ,Ramadas ,WALAJABAD ,WALAJA- SRIBUKUDUR HIGHWAY ,Palamaka ,Chennai- ,Bangalore National Highway 6 ,Walaja-Sributur Highway ,Ramdas ,
× RELATED பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை...