- தூத்துக்குடி படப்பிடிப்பு சம்பவம்
- Icourt
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- தூத்துக்குடி
- தூத்துக்குடி துப்பாக்கி சூடு
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 மே 22ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
நாடு முழுக்க இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கைத் தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்த வழக்கில், துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களைச் சேகரிக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் செந்தில்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தூத்துக்குடி சம்பவத்தில் உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகாரிகள் தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்க வேண்டும். ஆதாரங்களை போலீஸ் விசாரிக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அரசு செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுத்து வழக்கை முடித்து வைப்பது எப்படி நியாயம்? என்றும், அனுமதியின்றி தொழிற்சாலை செயல்பட்டது அரசுக்கு தெரிந்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்றும் சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. இதனைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பணியில் இருந்த காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய லஞ்சஒழிப்புத்துறை அவகாசம் கேட்டநிலையில், சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய 3 மாதம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.. உயிருக்கு பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஜீரணிக்க முடியாது: ஐகோர்ட் கண்டனம்!! appeared first on Dinakaran.