×
Saravana Stores

நீலகிரி, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சீரான மின்சாரம் வழங்குவது குறித்து காணொளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை..!!

சென்னை: நீலகிரி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் சீரான மின்சாரம் குறித்து காணொளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை மேற்கொண்டார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காரணமாக, தற்போது நீலகிரி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், முதலமைச்சர் அறிவுரையின் பேரில், பொது மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம், மேற்கண்ட மாவட்டங்களில், பாதுகாப்புடன் கூடிய சீரான மின்சாரம் வழங்குவது தொடர்பாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் இன்று (29.07.24) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலத்தில், அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களுடன் ஆகியோர்களுடன் காணொலி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இன்று (29.07.24) காலை 10 மணி நிலவரப்படி, மேற்கண்ட மாவட்டங்களில் கனமழை இருப்பினும், பொது மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம், அனைத்து இடங்களிலும் பாதுகாப்புடன் கூடிய சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கனமழையின் காரணமாக ஒரு சில இடங்களில் ஏதேனும் மின் தடங்கல் ஏற்பட்டாலும் கூட, அதற்கான காரணங்களை உடனடியாக கண்டறிந்து, அவற்றை உடனுக்குடன் சரி செய்து, பொது மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து, சீரான மின் விநியோகம் வழங்கிடவும், ஏதேனும், மின் தடங்கல் ஏற்படின் முதற்கட்டமாக, இம்மாவட்டங்களிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், குடிநீர் இணைப்புகள், அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் செல்போன் டவர்கள் அனைத்திற்கும் முன்னுரிமை அடிப்படையில் துரிதமாக மின்சாரம் வழங்க சம்பந்தப்பட்ட மேற்பார்வைப் பொறியாளர்களுக்கு அமைச்சர் அறிவுத்தினார்.

நீலகிரி மாவட்டத்தில், கனமழையின் காரணமாக இதுவரை பாதிப்படைந்த 230 உயரழுத்த மின் கம்பங்களில், 200 மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன, 466 தாழ்வழுத்த மின் கம்பங்களில், 302 மின் கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன, பாதிப்படைந்த 25 மின் மாற்றிகளில், 16 மின் மாற்றிகளில் சரி செய்யப்பட்டும், மீதமுள்ள 9 மின் மாற்றிகளுக்கு பின்னூட்டம் (Back Feeding) வழியாக சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. பாதிப்படைந்த பகுதிகளில் மின்சாரம் சீரமைக்கும் பணிகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள பொறியாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் உள்ளடங்கிய 250 பேர் கொண்ட குழு தற்போது களத்தில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள தேவையான மின்கம்பங்கள், மின்கம்பிகள் மற்றும் மின்மாற்றிகள் உட்பட அனைத்து தளவாட பொருட்களும் கையிருப்பில் உள்ளது.

மேலும், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிக்குட்பட்ட வடகவுஞ்சி, மேல்பள்ளம் மற்றும் சவரிக்காடு ஆகிய இடங்களில் கன மழையின் காரணமாக சேதமடைந்த மின் கம்பங்கள், மின்மாற்றிகள் உள்ளிட்ட உபகரணங்கள் அனைத்தும் விரைவாக சரி செய்யப்பட்டு இப்பகுதிகளுக்கு தற்போது சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட மாவட்டங்களில், சீரமைப்பு பணிகளில் ஈடுபடும் அனைத்து அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்கள் மிகுந்த கவனத்துடனும், உரிய பாதுகாப்புடனும் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மின் பகிர்மான வட்டங்களின் உயர் அலுவலர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினருடனும், தீயணைப்பு துறையினருடனும் எப்பொழுதும் தொடர்பில் இருக்க இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதற்காக, கடந்த 01.07.2024 முதல் ஒருங்கிணைந்த பரமாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள், இன்றைய நிலவரப்படி, 8,813 பழுதடைந்த மின்கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டிருக்கின்றன, சாய்ந்த நிலையில் இருந்த 8,040 மின் கம்பங்கள் சரிசெய்யப்பட்டிருக்கின்றன, புதியதாக 3,905 மின் கம்பங்கள் இடைசெருகல் செய்யப்பட்டிருக்கின்றன, 45,525 இடங்களில் பலவீனமான இன்சுலேட்டர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன, 10,605 இடங்களில் மின்கம்ப தாங்கு கம்பிகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன எனவும், இது தவிர்த்து சுமார் 182 கி.மீ. பழைய மின்கம்பிகள் புதியதாக மாற்றப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள பராமரிப்பு பணிகளை ஒரு மாத காலத்திற்குள் விரைந்து முடித்திட அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

பொதுமக்கள் மின்தடை சம்பந்தமான புகார்களை 24X7 மணி நேரமும் செயல்படும் மின் நுகர்வோர் மின் சேவை மையமான மின்னகத்தின் 94987 94987 என்ற அலைப்பேசி எண்ணின் வாயிலாகவும் மற்றும் சம்பந்தப்பட்ட மின்பகிர்மான வட்டங்களின் மின்தடை நீக்கம் மையம் வழியாகவும் தெரிவிக்குமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலத்தில், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., , இணை மேலாண்மை இயக்குநர் (நிதி) விஷு மஹாஜன், இ.ஆ.ப, K. இந்திராணி, இயக்குநர்/பகிர்மானம் (மு.கூ.பொ), அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் மற்றும் அனைத்து மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post நீலகிரி, கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சீரான மின்சாரம் வழங்குவது குறித்து காணொளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Minister Gold South Rashu ,Nilgiri, Godaikanal Highlands ,Chennai ,Minister Gold South Rasu ,Nilgiri ,Godaikanal ,Tamil Nadu ,Minister Gold ,South ,Rashu ,Dinakaran ,
× RELATED சென்னை போரூர் அருகே மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை