செங்கல்பட்டு, ஜூலை 29: மேலமையூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகரில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். செங்கல்பட்டு மேலமையூர் ஊராட்சி எம்ஜிஆர் நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் பேருந்துகளில் பயணம் செய்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வருகின்றனர்.
மேலும், இந்திரா நகர் பகுதி மக்களும், சட்ட கல்லூரி மாணவர்களும் இந்த பேருந்து நிறுத்தத்தை வெகுவாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் வசதிக்கென கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை முறையாக பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் அசுத்தமாக உள்ளது. நிழற்குடை அருகே செடி-கொடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடப்பதால் இரவு நேரங்களில் விஷப் பூச்சிகளின் நடமாட்டமும் காணப்படுகிறது.
எனவே, மேலமையூர் ஊராட்சி நிர்வாகம் அல்லது செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் செங்கல்பட்டு அரசு சட்ட கல்லூரி அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பேருந்து நிழற்குடையை சீரமைக்க வேண்டும். போஸ்டர்கள் ஒட்டுவது, மது குடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
The post மேலமையூர் ஊராட்சி எம்ஜிஆர் நகரில் பயணியர் நிழற்குடையை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.