×

ரஷ்யாவைத் தொடர்ந்து பிரதமர் மோடி உக்ரைன் பயணம்: மூன்றாண்டாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சியா?

டெல்லி: ஆகஸ்ட் 23ம் தேதி பிரதமர் மோடி உக்ரைன் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்த நிலையில் 3 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. இருப்பினும் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போராடி வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் உதவி அளித்து வருவதால் உக்ரைன் அவ்வப்போது ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

போரை நிறுத்துமாறு சர்வதேச நாடுகள் நேரடியாக ரஷ்யாவை வலியுறுத்தியபோதிலும் ரஷ்யா தனது தாக்குதலைத் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் தொடங்கியதில் இருந்தே பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. சமீபத்தில், 2 நாள் பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, அதிபர் விளாடிமிர் புதினிடம், போர் தீர்வு அல்ல; சமரச பேச்சு தான் தீர்வு தரும் என புதினிடம் கூறியிருந்தார். புதினை சந்தித்து உரையாடியதற்கு ஜெலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி உக்ரைன் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 23ம் தேதி பிரதமர் மோடி உக்ரைன் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கிய பிறகு முதல் முறையாக உக்ரைன் செல்லவுள்ளதால், இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

The post ரஷ்யாவைத் தொடர்ந்து பிரதமர் மோடி உக்ரைன் பயணம்: மூன்றாண்டாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சியா? appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Ukraine ,Russia ,Delhi ,Modi ,Zelensky ,PM ,Dinakaran ,
× RELATED உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!