×

ஒகேனக்கல் காவிரி உபரிநீரை மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு பம்பிங் செய்து நிரப்ப வேண்டும்

*விவசாயிகள் வலியுறுத்தல்

தர்மபுரி : மழைக்காலத்தில் ஒகேனக்கல் காவிரி உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த உபரிநீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு பம்பிங் செய்து நிரப்ப, தமிழக அரசு நடவடிக்கை வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் எஸ்ஏ சின்னசாமி பேசியதாவது:

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழைக்காலத்தில் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த நீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு பம்பிங் செய்து நிரப்ப, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மாவட்டத்தில் பருவமழை பெய்யாமல், வேலை இல்லாமல் பஞ்சம் பிழைக்க பெங்களூருக்கு கூலிவேலைக்கு செல்கின்றனர். அங்கு காவிரி பிரச்னையில் தாக்கப்பட்டு, சொந்த ஊருக்கு விவசாயிகள் திரும்பும் நிலை உள்ளது.

இந்நிலை மாற ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை அரசு செயல்படுத்தினால், சொந்த ஊரில் விவசாயத்தை கவனித்துக்கொண்டு விவசாயிகள் குடும்பத்துடன் இருக்கும் நிலை ஏற்படும். ஈச்சம்பாடி அணைக்கட்டில் பம்பிங் மூலம் சுற்றுவட்டார ஏரிகளுக்கு நீரேற்றம் மூலம் நிரப்பும் திட்டம், செயல்படுத்த வேண்டும். தும்பல அள்ளி – எண்ணேகோல்புதூர் நீர்பாசன திட்டம், அலியாளம் – தூள்செட்டி ஏரி நீர்பாசனத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றார்.

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பிரதாபன்: தர்மபுரி மாவட்டம் வனம் மற்றும் மலையை சார்ந்த பகுதி. இங்கு அதிகமாக கால்நடைகள் வளர்க்கப்படுகிறது. மாவட்டத்தில் காவிரி வடக்கு, தெற்கு வன உயிரின சரணாலயங்கள் உள்ளன. இங்கு கால்நடை மேய்ச்சலுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. வன விலங்குகளிடம் இருந்து கால்நடைகளுக்கும், கால்நடைகளிடம் இருந்து வனவிலங்குகளுக்கும் பரவும் நோயை கட்டுப்படுத்தவும், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கும் நோய் பரவாமல் தடுப்பதும் அவசியமாகிறது.

இதனால் சரணாலய பகுதிகளில் கால்நடைகளின் நடமாட்டம், இந்திய வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்திற்கு புறம்பாக உள்ளதால், அவற்றை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வரும் 1ம் தேதி முதல் கால்நடைகள் சரணாலய பகுதிகளில் கண்டறியப்பட்டால், அவற்றை பிடித்து அரசுடைமையாக்கப்படும். பின்னர் அவற்றை பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. இந்த வார்த்தையை உடனே வனத்துறை திரும்ப பெற வேண்டும்.

விவசாயிகளின் கேள்விக்கு கலெக்டர் பதில் அளித்து பேசுகையில், ‘தமிழக முதல்வர் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வனத்தில் கால்நடை மேய்ச்சல் மற்றும் கால்நடை பறிமுதல் குறித்து, விவசாயிகள் மற்றும் வனத்துறையினர் தனியாக விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தி கலந்து பேசி, தீர்த்துக்கொள்ள வேண்டும். ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டம் அரசு பார்வையில் உள்ளது.

நீர்ப்பாசன திட்டங்கள் விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள, அரசுத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் பிரியா, தர்மபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை (பாலக்கோடு) ரவி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சாமிநாதன், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) குணசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (பொ) மலர்விழி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒகேனக்கல் காவிரி உபரிநீரை மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு பம்பிங் செய்து நிரப்ப வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Okanagan Cauvery ,Dharmapuri ,Okanagan ,Cauvery ,Tamil Nadu government ,Okenakkal Cauvery ,
× RELATED ஒகேனக்கல்லில் நீர்வரத்து 12,000 கனஅடியாக அதிகரிப்பு..!!