×
Saravana Stores

இந்த வார விசேஷங்கள்

27.7.2024 – சனி தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு

தேவகோட்டை ரெங்கநாதப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயிலில் ரெங்கநாதபெருமாள், ரெங்கநாயகி, கோதைநாச்சியார் சந்நதிகளும், தாயார், ஆண்டாள், அனுமார் உபசந்நதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. சித்திரை மாதம் 10 நாள் தேரோட்டம் முக்கியத் திருவிழாவாக நடைபெறுகிறது. இன்று சனிக்கிழமை ரெங்கநாதர் புறப்பாடு நடக்கிறது.

29.7.2024 – திங்கள் ஆடி கிருத்திகை

ஆடி மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆடிக் கிருத்திகையாகும். கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் இருப்பது மிகவும் நல்லது. அதிலும் ஆடிக் கிருத்திகையன்று விரதம் இருந்தால், எல்லாவிதமான தோஷங்களும் நிவர்த்தியாகும். சிவபெருமானின் அருளால் தோன்றிய முருகப் பெருமான், கார்த்திகை பெண்களால் சீராட்டி வளர்க்கப்பட்டார். அந்தக் கார்த்திகை பெண்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்கள் ஆறுபேரும் கார்த்திகை நட்சத்திரங்களாக மாறி அன்றைய தினத்தில் முருகப் பெருமானை வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. வருடத்தில் தை கிருத்திகை, ஆடிக் கிருத்திகை என்ற இரு நாட்களும் சிறப்பானதாகும். வீட்டையும், பூஜை அறையையும் முழுமையாகத் துடைத்து சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பூஜையறையில் முருகப் பெருமானின் திருவுருவப் படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து, மற்ற தெய்வங்களின் திருவுருவப் படத்திற்கு புதியதாகப் பூக்களைச் சூட்டி, முருகனின் படத்திற்கு முன்பு அரிசி மாவில் அறுகோண கோலம் இட வேண்டும். பின்பு முருகனின் படத்திற்கு இருபுறமும் நெய் தீபமேற்றி, பழங்களை நிவேதனம் வைத்து, பூஜையறையில் அமர்ந்து உணவு, நீர் என எதுவும் அருந்தாமல் கந்த சஷ்டி கவசம் அல்லது சண்முக கவசத்தை மனமொன்றி படிக்க வேண்டும். முருகப் பெருமானுக்குச் சர்க்கரைப் பொங்கலை நெய், முந்திரிப் பருப்பு, ஏலக்காய் சேர்த்து நிவேதனமாக வைக்கலாம். தூப தீராத கஷ்டத்தைத் தீர்த்து வைத்து, சகல செல்வங்களும் அள்ளித்தரும் இந்த ஆடி மாத கார்த்திகை விரதம்.

30.7.2024 – செவ்வாய் ஆண்டாள் உற்சவம் ஆரம்பம்

ஸ்ரீவில்லிபுத்தூர் என்றாலே ஆண்டாள் தானே! ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள் கோயில் என்று சொல்வதைவிட ஆண்டாள் கோயில், நாச்சியார் கோயில் என்றுதான் அப்பகுதி மக்கள் அழைப்பார்கள். அத்தனை ஏற்றம் ஆண்டாளுக்கு. அவள் அவதரித்த மாதம் ஆடி மாதம். நட்சத்திரம் பூர நட்சத்திரம். இதை ஒட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் உற்சவம், பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்படுகிறது. அதில் இன்று கொடியேற்றம்.

30.7.2024 – செவ்வாய் மூர்த்தி நாயனார் குருபூஜை

63 நாயன்மார்களில் ஒருவர் மூர்த்தி நாயனார். வணிக மரபில் வந்தவர் அற்புதமான சிவபக்தர் மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனத்தால் அபிஷேகம் செய்ய இடைவேளை இன்றி தினமும் சந்தனக் கட்டையை வழங்கும் சேவையை மேற்கொண்டவர். அப்பொழுது மதுரை மீது படையெடுப்பு நடந்து மதுரை நகரம் சமண மதத்தைச் சார்ந்த மன்னர்களுக்கு வசப்பட்டது. ஆயினும், மூர்த்தி நாயனார் தன்னுடைய சேவையைத் தொடர்ந்து கொண்டிருந்தார். இவருடைய சேவையைத் தடுக்க வேண்டும் என்பதற்காக அரசாங்க ஊழியர்கள் சந்தனக் கட்டையை கிடைக்கவிடாமல் செய்தனர். எத்தனை முயன்றும் இறைவனுக்கு சந்தன அபிஷேகத்துக்கு உதவ முடியவில்லை. இதை எண்ணி மனம் துடித்த மூர்த்தி நாயனார் சந்தனத்தை அரைக்க பயன்படுத்தும் கல்லில் தம்முடைய கைகளை அரைத்தார். அவருடைய தோல் உரிந்தது. எலும்புகளும் நரம்புகளும் வெளிப்பட்டன. இதனைக் கண்டு பொறுக்க முடியாத இறைவன், அவரைத் தடுத்தான். அதே நேரம், இவருடைய தொண்டினைத் தடுத்த மன்னன், வாரிசு இன்றி இறந்தான். புதிய மன்னனைத் தேர்ந்தெடுக்க பட்டத்து யானை மாலையுடன் வலம் வந்தது. மயங்கி கிடந்த மூர்த்தி நாயனாரின் கழுத்தில் மாலையைப் போட அவர் அரசபட்டத்தை ஏற்றுக் கொண்டார். சைவப்பணியும் தொண்டும் தொடர்ந்தது. சிவன் அருள் பெற்ற மூர்த்தி நாயனாரின் குருபூஜை இன்று.

30.7.2024 – செவ்வாய் புகழ்ச் சோழ நாயனார் குருபூஜை

புகழ்ச் சோழன் என்பது, சிவபக்தியால் புகழ்பெற்ற சோழன் என்று பொருள்படும். கருவூரைத் தலைநகராகக் கொண்டு (இன்றைய கரூர்) ஆண்ட மன்னன் இவர். சிவனிடத்திலும் சிவன் அடியாரிடத்தும் எல்லையற்ற அன்பும் பக்தியும் கொண்டு அவர்களுக்குத் தொண்டு செய்வதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர். கருவூரில் உள்ள சிவாலயம் ஆனிலை. அங்கே உள்ள இறைவனின் திருநாமம் பசுபதீஸ்வரர். இந்த ஆலயத்தொண்டை தூய மனத்தினனாய் தொடர்ந்தார் இந்நிலையில் பல்வேறு மன்னர்களை வென்ற புகழ் சோழன், தனக்கு திரை செலுத்தாமல் இருந்த அதிகன் என்ற மன்னனை வென்று வரதன் படைகளை அனுப்பினார். அந்தப் படைகளும் அதிகனை வென்றது. அவர்கள் அங்கிருந்து பல்வேறு விதமான பொன் பொருள்களை எடுத்துக் கொண்டு புகழ்ச் சோழனைக் காண வந்தனர். அப்பொழுது போரில் வெல்லப் பட்ட அதிகனின் தலையையும் காணிக்கையாகக் கொண்டு வந்தனர்.

அந்தத் தலையைப் பார்த்த புகழ்ச் சோழன் அது சடா முடியாக இருக்கக் கண்டு ஒரு சிவனடியாரை கொன்றுவிட்டோமே என்று எண்ணி மனம் துடித்தார், பதை பதைத்தார். பெரும் பிழை நடந்து விட்டது என்று மனம் வெதும்பினார். ஒரு சிவனடியாரைக் கொன்ற நான் சிவத் துரோகம் செய்துவிட்டேன். இனியும் நான் உயிர் வாழ்வதில் பொருள் இல்லை. இப்படி எண்ணிய உடனே தன்னுடைய மைந்தனுக்கு அரசாட்சியை தந்துவிட்டு, தீ வளர்த்து, அந்தத் தீயில் புகுந்தார். அறியாமல் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டார். சிவபக்தியின் உச்சத்தில் இச்செயலைச் செய்த புகழ்ச்சோழ நாயனாரின் குருபூஜை தினம் ஆடி மாதம் கார்த்திகை நட்சத்திரம் (அதாவது இன்று) பெரும்பாலான சிவாலயங்களிலும் சைவ மடங்களிலும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

31.7.2024 – புதன் திருப்பரங்குன்றம் மச்சமுனி குருபூஜை

எத்தனையோ சித்தர்கள் வாழ்ந்த பூமியிது. அதில் ஒரு சித்தர்தான் மச்சமுனி. அவர் பாடல் இது;

“செபித்திட காலம் செப்புவேன் மக்களே
குவித்தெழுந்தையும் கூறும் பஞ்சாட்சரம்
அவித்திடும் இரவி அனலும் மேலும்
தவித்திடும் சிந்தை தளராது திண்ணமே’’

இப்பாட்டின் பொருள்: ஜபம் செய்ய ஏற்ற காலம் பற்றி சொல்கிறேன் மக்களே! காலையில் எழுந்ததும் திருவைந்தெழுத்தாகிய பஞ்சாட்சர மந்திரத்தை (நமசிவாய) ஓதவும். காலையில் இதை ஜபித்திட சூரியக் கதிர்கள் உடலில் பரவும். இதனால் மனம் உறுதியடையும். ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றம் மலையில் மச்சமுனி, மச்சேந்திர நாதர், மச்சேந்திரா என்னும் பெயர்களால் அழைக்கப்படும் மச்சமுனி சித்தர் ஜீவ சமாதி உள்ளது. மலைமீது இருக்கும் காசிவிஸ்வநாதர் கோயிலில்தான் மச்ச முனியின் ஜீவசமாதி அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பின்பக்கம் இருக்கும் சுனை நீரில் மச்சேந்திரர் மீன் உருவில் இன்றும் நீந்துவதாக ஓர் ஐதீகம். ஆடி மாதம் ரோகிணியில் அவதரித்து, 300 வருடம் 62 நாட்கள் வாழ்ந்த இந்த சித்தரின் குருபூஜை இன்று நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் மலையின் மேல் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பின்புறம் ஒரு சுனை உள்ளது. அங்கே பக்தர்கள் தயிரை வாங்கி சுனை நீரில் விடுகிறார்கள். அப்பொழுது மச்ச முனி சித்தர் மீன் வடிவில் வந்து அந்தத் தயிரை ஏற்றுக் கொண்டு நமக்கு நல்லருள் புரிகிறார் என்பது நம்பிக்கை.

2.8.2024 – வெள்ளி கூற்றுவ நாயனார் குருபூஜை

கூற்றுவ நாயனார் தில்லை சிற்றம் பலத்தில் அருள்புரியும் நடராஜப் பெருமானின் திருவடிகளையே திருமுடியாக ஏற்றுக் கொண்ட மன்னர். திருக்களந்தை என்னும் ஊரில் களப்பாளர் மரபில் தோன்றியவர், கூற்றுவ நாயனார். போர் புரிகையில் கூற்றுவனைப் போல் மிடுக்குடன் போர் புரிவார். எனவே, இவர் கூற்றுவர் என்று அழைக்கப்பட்டார்.பஞ்சாட்சர மந்திரமும், சிவநெறியும் இவர் வாழ் நெறியாகும். எப்பொழுதும் அரனாரின் திருநாமத்தை மறவாமல் ஓதிய படியே இருப்பார். சிவனடி யார்களைக் கண்டால் சிவனாகவே எண்ணி அவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுப்பார். குறுநில மன்னரான கூற்றுவ நாயனார் தம்முடைய வலிமையால் மூவேந்தர்களையும் வென்று வெற்றி வீரராக விளங்கியபோதும், அவரால் முடியுடை மன்னராக முடியவில்லை.

கூற்றுவ நாயனார் இறைவனின் திருக்கோயில்களில் சிறந்த தலமான தில்லையில் முடிசூடிக் கொள்ள ஆர்வம் கொண்டார். அதே சமயத்தில் சோழர்களின் மணிமுடியை தில்லைவாழ் அந்தணர்கள் பாதுகாத்து வந்தனர். ஆதலால் தில்லையை அடைந்த கூற்றுவநாயனார் மணிமுடி சூடிக்கொள்ளும் தம்முடைய விருப்பத்தை தில்லைவாழ் அந்தணர்களிடம் தெரிவித்தார்.அதற்கு தில்லைவாழ் அந்தணர்கள், “சோழப் பரம்பரையில் வரும் மன்னர்களைத் தவிர மற்ற மன்னர்களுக்கு மரபுக்கு மாறாக திருமுடி அணிவிக்க மாட்டோம்.” என்று மறுத்து விட்டனர். சோழ நாட்டினை ஆளும் மன்னனுக்கு முடிசூட மறுத்ததால், அரசனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று தில்லை வாழ் அந்தணர்கள் அஞ்சினர்.

ஆதலால் தம்மில் ஒரு குடும்பத்தாரை மட்டும் தில்லை ஆடலரசனுக்கு வழி பாட்டினை நடத்தவும், சோழ அரசரின் மணிமுடியைப் பாதுகாக்கவும் சோழ நாட்டில் விட்டுவிட்டு ஏனையோர் சேர நாட்டிற்கு புலம் பெயர்ந்தனர்.தில்லைவாழ் அந்தணர்கள் எனக்கு திருமுடியைச் சூடாவிட்டாலும், அவர்களுள் முதல்வராகிய ஆடலரசனின் திருவடியை நன்முடியாகச் சூடிக் கொள்வேன்’ என்று எண்ணி அம்பலத்தரசனை, ‘நீயே நின் திருவடியை எனக்கு மணிமுடியாகச் சூட்டி அருள வேண்டும்’ என்று மனமுருகி வேண்டிக் கொண்டார்.

அன்றிரவு கூற்றுவ நாயனார் துயில்கையில் அவர் கனவில் தோன்றிய ஆடலரசன் குஞ்சித பாதத்தை தம்முடைய அடியாரின் விருப்பப்படியே மணிமுடியாகச் சூட்டினார். உடனே விழித்தெழுந்த நாயனார் தாம் பெற்ற பேற்றை எண்ணி மகிழ்ந்தார். தில்லைவாழ் அந்தணர்கள் சேர நாடு சென்றதற்கான காரணத்தை அறிந்து ‘எதற்கும் அஞ்ச வேண்டாம்’ என்று ஓலை அனுப்பி அவர்களை சோழ நாட்டிற்கு மீண்டும் வருவித்தார் கூற்றுவர். இறைவனார் கோயில் கொண்டுள்ள பலத் திருத்தலங்களுக்கும் சென்று, திருத்தொண்டுகள் செய்து வழிபட்டார். இறுதியில் வீடுபேற்றினை இறையருளால் பெற்றார். கூற்றுவ நாயனார் குருபூஜை ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பின்பற்றப்படுகிறது.

28.7.2024 – ஞாயிறு – இருக்கன்குடி மாரியம்மன் அலங்கார திருமஞ்சனம்.
29.7.2024 – திங்கள் – சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்.
29.7.2024 – திங்கள் – திருவிடைமருதூர் ஆடிப்பூரம் கொடியேற்றம்.
31.7.2024 – புதன் – சர்வ ஏகாதசி.
1.8.2024 – வியாழன் – பிரதோஷம்.
1.8.2024 – வியாழன் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பரங்கி பெருமாள் சிறிய திருவடி வீதிஉலா.
2.8.2024 – வெள்ளி – மூன்றாம் வெள்ளி அம்மன் கோயில்களில் விசேஷம்.
2.8.2024 – வெள்ளி – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சேஷவாகனம் பெருமாள் கோவர்த்தனகிரி வீதிஉலா.
2.8.2024 – வெள்ளி – மாத சிவராத்திரி.
2.8.2024 – வெள்ளி – ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி காலை தங்கப் பல்லக்கு இரவு வெள்ளி யானை வாகனம்.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Sani Devakota Ranganathar Departure Devakota Renganathap Perumal Temple ,Devakota, Sivaganga District, Tamil Nadu ,Echoil ,Renganathaberumal ,Renganayagi ,Gothainachiyar ,Sannadiakum ,Thayar ,Andala ,
× RELATED சித்தூர் அருகே ஆடி அமாவாசையொட்டி ஓம்...