×

மயிலம் அருகே நாட்டு மருத்துவம் செய்வதாக கூறி நூதன முறையில் நகைகள் கொள்ளை

*2 பெண்கள் உட்பட 4 பேர் கைது

திண்டிவனம் : விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே நாட்டு மருத்துவம் செய்வதாக கூறி கிராம மக்களிடம் நூதன முறையில் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற 2 பெண்கள் உட்பட 4 பேரை மயிலம் போலீசார் கைது செய்தனர்.மயிலம் அடுத்த பொம்பூர் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் மனைவி ராணி (40), இவர் கடந்த ஜூலை15ம் தேதி வீட்டில் இருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பைக்கில் வந்து நாட்டு மருந்து கொடுப்பதாக கூறி நைசாக பேசி உள்ளார்.

பின்னர் மருந்தை உபயோகிக்கும்போது தங்க நகைகளை அணிய கூடாது என ராணி அணிந்திருந்த கம்மல், மோதிரம் உள்ளிட்ட ஒரு சவரன் நகையை கேட்டு வாங்கி உள்ளார். அப்போது ராணி அவரது நகையை கழற்றி கொடுத்துள்ளார். நகைகளுடன் தப்பி சென்றுள்ளார். இது குறித்து மயிலம் போலீசில் ராணி புகார் கொடுத்தார். இதேபோல் மயிலம் அடுத்த ஐவேலி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி அழகம்மாள் (50) வீட்டில் தனியாக இருந்தபோது அடையாளம் தெரியாத நபர் பைக்கில் வந்து நாட்டு வைத்தியம் செய்வதாக கூறியுள்ளார். அழகம்மாளிடம் நாட்டு மருந்துகளை கொடுத்துவிட்டு அவரிடமும் மருந்தை உபயோகிக்கும்போது தங்க நகைகளை அணிய கூடாது என 1 சவரன் நகையை கேட்டு வாங்கி கவனத்தை திசை திருப்பி அங்கிருந்து மாயமாகியுள்ளார்.

இரண்டு புகார் குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்த மயிலம் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். பாதிராப்புலியூர் கிராமத்தில் மயிலம் போலீசார் நேற்று காலை 8 மணிக்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியில் 2 பைக்கில் வந்த 4 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை செய்தனர். விசாரணையில், காட்பாடி அடுத்த திருவளம் கிராமம், பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த முருகன் மகன் வல்லரசு (22), கணேசன் மகன் செல்வம் (23), இவரது மனைவி மீனாட்சி (23), முருகன் மனைவி வள்ளியம்மாள் (40) என்பது தெரியவந்தது.

இவர்கள் பொம்பூர் மற்றும் ஐவேலி கிராமத்தில் நாட்டு வைத்தியம் பார்ப்பதாக கூறி நூதன முறையில் பெண்களின் கவனத்தை திசை திருப்பி தங்க நகைகளை திருடி சென்றதை ஒப்புக்கொண்டனர். வீடூர் பகுதியில் இவர்கள் தற்காலிக டெண்ட் அமைத்து தங்கி இருப்பதாக தெரிவித்தனர். இவர்களிடமிருந்து 3 சவரன் நகைகளையும், 2 பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் குற்றவாளிகள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

The post மயிலம் அருகே நாட்டு மருத்துவம் செய்வதாக கூறி நூதன முறையில் நகைகள் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Mayilam ,Mayilam, Vilupuram district ,Centennial ,Dinakaran ,
× RELATED மயிலம் முருகன் கோயிலில் நடிகர் ரஜினி மகள் சாமி தரிசனம்