சேலம், ஜூலை 26: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்பையடுத்து, சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டு இறுதிக்குள் 30 கோயில்களில் கும்பாபிஷேக விழா நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கும்பாபிஷேகம் ஒவ்வொரு இந்து கோயில்களிலும் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய ஒரு சடங்காகும். குடத்தில் நீர் நிரப்பி புனித ஆறுகளின் நீராக உருவகித்து மந்திரங்களினால் ெதய்வத்தன்மை ஏற்றப்பட்ட நீரினால் சிலைகளும், கோபுரத்தின் உச்சிலிருக்கும் கலசங்களும் நீராட்டப்படுவதால் இது குடமுழுக்கு என்று அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில், கட்டுப்பாட்டில் இல்லாத கோயில் என நூற்றுக்கணக்கான கோயில்களில் கும்பாபிஷேக விழா நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு இறுதிக்குள் 2 ஆயிரம் கோயில்களுக்கு கும்பாபிஷேக விழா நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பையடுத்து சேலம் மாவட்டத்தில் திருப்பணிகள் நடக்கும் கோயில்களில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டல அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்து 615 கோயில்கள் உள்ளன. கோயில்களில் ஆண்டு வருமானத்தை வைத்து தரம் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்டுக்கு ₹10 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் கோயில்கள் முதல்நிலை கோயிலாகவும், ₹5 லட்சம் வருமானம் வரும் கோயில் இரண்டாம் நிலை கோயிலாகவும், ₹3 லட்சம் உள்ள கோயில் மூன்றாம் நிலை கோயிலாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
கோயிலில் தற்போது அன்னதானம் திட்டம், தினசரி பிரசாதம் வழங்கும் திட்டம், பூசாரிகளுக்கு ஓய்வூதியம், பல ஆண்டாக கும்பாபிஷேகம் நடக்காத கோயில்கள் கண்டறிந்து, அந்த கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா நடத்தவும் அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்பது, குத்தகை வராமல் இருக்கும் கோயில் நிலங்களுக்கு குத்தகை வரவைத்தல், வாடகை வசூல் என்ன பல்வேறு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்ற பின் பல ஆண்டாக கும்பாபிஷேக விழா நடக்காத கிராமப்புற கோயில், பெரிய கோயில்களை கணக்கெடுத்து அதற்கான திருப்பணிகள் மேற்கொண்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சேலம் மண்டலம் சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாவட்டங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டாவது அக்ரஹாரம் காசிவிஸ்வநாதர் கோயில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோயில், செந்தாரப்பட்டி சக்ரதாழ்வார் கோயில், செந்தாரப்பட்டி விநாயகர் கோயில், தம்மம்பட்டி கதலி நரசிம்ம பெருமாள்கோயில், கவர்பனை விநாயகர் கோயில் என 60க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பாண்டு இறுதிக்குள் 30 கோயில்களில் கும்பாபிஷேக விழா நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
The post நடப்பாண்டில் 30 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த இலக்கு appeared first on Dinakaran.