×

வங்கதேசத்தில் இருந்து தமிழக மாணவ, மாணவிகள் 42 பேர் சென்னை வந்தனர்: இதுவரை 208 பேர் மீட்பு

சென்னை: வங்கதேசத்தில் இருந்து மேலும் 42 தமிழக மாணவ, மாணவிகள் சென்னை வந்தனர். அங்கிருந்து இதுவரை 208 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தால் இந்தியாவில் இருந்து மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகினர். இந்திய எல்லை அருகே உள்ள நகரங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் தூதரக அதிகாரிகள் மூலம் இந்திய எல்லைக்கு அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் அங்கிருந்து 4வது நாளாக 42 மாணவர்கள், நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா, கவுகாத்தி விமானங்களில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அந்த மாணவர்கள் கிருஷ்ணகிரி, கடலூர், தர்மபுரி, தஞ்சாவூர், சேலம், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், ஈரோடு, விழுப்புரம், தென்காசி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
சென்னை விமான நிலையம் வந்த மாணவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். பின்னர் அனைவரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தான் அளித்த பேட்டி: கடந்த 21ம் தேதி 49 மாணவர்களும், 22ம் தேதி 82 மாணவர்களும், 23ம் தேதி 35 மாணவர்களும், இப்போது 42 மாணவர்கள் என மொத்தம் 208 மாணவர்களை அழைத்து வந்துள்ளோம். முதல்வர் அறிவுறுத்தலின்பேரில், நமது துறை சார்பாக, உணவுடன் விமான கட்டணத்தை ஏற்று மாணவர்களின் இல்லம் வரை சென்று பெற்றோர்களிடம் ஒப்படைக்கின்ற பணியை செய்து வருகிறோம். இதனை தொடர்ந்து மேலும் 8 மாணவர்கள் நாளை (இன்று) சென்னைக்கு வர உள்ளார்கள். வங்கதேசத்தில் அமைதியான சூழ்நிலை உருவாகிய பின்பு, இந்த மாணவ, மாணவிகள் மீண்டும் அங்கு சென்று தங்களுடைய கல்வியை தொடர அரசு உதவிகள் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

The post வங்கதேசத்தில் இருந்து தமிழக மாணவ, மாணவிகள் 42 பேர் சென்னை வந்தனர்: இதுவரை 208 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Bangladesh ,Chennai ,India ,Indian ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...