×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள அஞ்சலை மீது மேலும் ஒரு வழக்கு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை போலீசார் 16 பேரை கைது செய்துள்ளனர். இதில் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், ராமு ஆகிய 3 பேரை 2வது முறையாக 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். நேற்றுடன் விசாரணை முடிந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் ஹரிஹரனையும் போலீஸ் காவலில் எடுத்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். இவருக்கு 5 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளதால் இன்று, நாளை என 2 நாட்கள் இவரிடம் மேலும் போலீசார் விசாரிக்க வேண்டியுள்ளது.

போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட நபர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் 4 பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருவதாகவும், இதில் பிரபல ரவுடி சீசிங் ராஜாவின் உறவினர் ஒருவர் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பந்தம் இருப்பின், போலீசார் இவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கக்கூடும் என்பதால் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் சம்பவ செந்தில் மற்றும் சீசிங் ராஜாவை இந்த வழக்கில் தொடர்ந்து தனிப்படை போலீசார் தேடி வரும் நிலையில், கடந்த 20ம் தேதி பாஜ வடசென்னை மேற்கு மாவட்ட துணைத்தலைவி அஞ்சலை கைது செய்யப்பட்டார். இவர் கொலையாளிகளுக்கு பணம் கொடுத்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் அஞ்சலை மீது மற்றுமொரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவைச் சேர்ந்த முகமது அஜாருதீன் (37) என்பவர் எழும்பூர் பகுதியில் தனியார் நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார்.

திருமணம் மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் விருந்து மற்றும் அது தொடர்பான பொருட்களை வாடகைக்கு வழங்கி வந்துள்ளார். இவரிடம் இம்ரான் என்பவர் கடந்த 5 வருடங்களாக பணிபுரிந்து வந்துள்ளார். வியாபாரம் சம்பந்தமாக முகமது அஜாருதீனுக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. இதற்காக இம்ரான் மூலமாக புளியந்தோப்பைச் சேர்ந்த அஞ்சலை மற்றும் அவரது மகள் சங்கீதா ஆகியோரை தொடர்புகொண்டு அவர்களிடம் இருந்து சுமார் ரூ.30 லட்சம் பெற்றுள்ளார். இதற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.66 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி செலுத்தியுள்ளார்.

ரூ.66 லட்சம் வாங்கிய பிறகும் அஞ்சலை மற்றும் அவரது மகள் சங்கீதா ஆகியோர் தொடர்ந்து முகமது அஜாருதீனை தொடர்பு கொண்டு மிரட்டி பணம் கேட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு பயந்து மேலும் சில தவணைகளில் பணம் கொடுத்த முகமது அஜாருதீன் ஒரு கட்டத்தில் பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் கடந்த மே மாதம் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தியபோது அஞ்சலை உள்ளிட்ட அனைவரும் தலைமறைவாகி விட்டனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை தூசு தட்டிய பேசின் பிரிட்ஜ் போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் உள்ள அஞ்சலையை எழும்பூர் 10வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி, அஞ்சலையை இந்த வழக்கில் அடுத்த மாதம் 8ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அவரை மீண்டும் புழல் மகளிர் சிறையில் அடைத்தனர். அஞ்சலை மீது ஏற்கனவே புளியந்தோப்பு, பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 12 குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

* மேலும் ஒரு வக்கீல் கைது
திருவள்ளூர் மாவட்டம், மாத்தூரை சேர்ந்தவர் வக்கீல் சிவா (38). இவரை தனிப்படை போலீசார் விசாரித்தனர். அதில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டதால், சிவாவை நேற்று போலீசார் கைது செய்தனர். தலைமறைவான சம்பவ செந்தில், வக்கீல் சிவா மூலம் பணப் பரிவர்த்தனை செய்ததும், சம்பவ செந்திலுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. பிறகு எழும்பூர் 5வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிவாவை பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்தனர். சிவா வீட்டிலிருந்து ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிவாவுடன் சேர்த்து இதுவரை 5 வக்கீல்கள் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் உள்ள அஞ்சலை மீது மேலும் ஒரு வழக்கு appeared first on Dinakaran.

Tags : Anjali ,Armstrong ,Chennai ,Bahujan Samaj Party ,president ,Ponnai Balu ,Arul ,Ramu ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி...