×

காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் அனைத்தும் மிக சிறந்த முறையில் செயல்பட்டு தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது: கொரோனா களப்பணியாற்றிய 1.17 லட்சம் காவலர்களுக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.58.50 கோடி ஊக்கத்தொகை வழங்கல்; தமிழக அரசு தகவல்

சென்னை: காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகள் அனைத்தும் மிகச் சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றது முதல், தம்முடைய பொறுப்பிலேயே உள்ள காவல்துறையை சீராக வளர்த்து தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலையை மிகவும் சிறப்பாக பராமரித்து இந்தியா அளவில் தமிழ்நாட்டிற்கு புகழ் சேர்த்து வருகிறார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை மிகவும் சிறப்பாக இருப்பதால்தான் தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில், கல்வி வளர்ச்சியில், உள்கட்டமைப்புகளின் மேம்பாட்டில், மனித வளர்ச்சி குறியீட்டில் என எந்த வகையில் எடுத்துக் கொண்டாலும் இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது.

எனவே சட்டம் ஒழுங்கை தொடர்ந்து காப்பதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. 18 ஆண்டுகளாக நின்று போயிருந்த சிவங்கை கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேரோட்டத்தை எந்த பிரச்னையும் இன்றி, சுமுகமாக நடத்திக் காட்டியது. அதற்காக அந்த பகுதி மக்கள் முதல்வரை நேரில் சந்தித்து நன்றி கூறி மகிழ்ந்தனர். இன்றைக்கு தமிழ்நாடு வளர்ச்சி மிகு மாநிலமாக இருக்கிறது என்றால் அமைதிமிகு மாநிலமாக அது இருப்பதால்தான். கொரோனா தொற்றுத் தடுப்பில் களப்பணியாற்றிய 1.17 லட்சம் காவல் துறையினருக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.5,000 வீதம் ரூ.58.50 கோடியை முதல்வர் வழங்கினார். காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்திடவும், காவல் பணியாளர்களின் நலன்களை காத்திடவும் அரசுக்கு ஆலோசனைகள் வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் 5வது காவல் ஆணையம் அமைத்துள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையரகத்தை நிர்வாக ரீதியாக பிரித்து ஆவடி, தாம்பரம் என இரு புதிய ஆணையரகங்களை உருவாக்கி, அவற்றுக்கு ரூ.44.46 கோடியில் 352 நான்கு சக்கர வாகனங்களையும், 396 இரண்டு சக்கர வாகனங்களையும் வழங்கி அவை மக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் உரிமைகளை உறுதி செய்யவும், அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கவும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யவும், ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்களில் புதிதாக சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ரூ.1.91 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்திட அனைத்து காவல் உட்கோட்டங்களிலும் 39 புதிய மகளிர் காவல் நிலையங்களையும், கோயம்பேடு, கோட்டூர்புரம், புழல் உள்ளிட்ட 19 இடங்களில் புதிய மகளிர் காவல் நிலையங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ளார். காவல் துறையில் மகளிர் காவலர்கள் நியமிக்கப்பட்ட 50ம் ஆண்டு நிறைவையொட்டி 17.3.2023 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சியில் சிறப்பு தபால் உறையை முதல்வர் வெளியிட்டார். அத்துடன், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘அவள்’ திட்டத்தையும் அறிமுகப்படுத்தினார்.

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 62 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், திருநெல்வேலி மாநகர் மற்றும் மாவட்ட ஆயுதப்படைகளுக்கு 2 ஒருங்கிணைந்த நிர்வாக கட்டிடங்கள் ஆகியவற்றை 4.1.2024 அன்று முதல்வர் திறந்து வைத்தார். ரூ.481.92 கோடி செலவில் 2,882 காவல்துறை வாடகை குடியிருப்புகள், ரூ.42.88 கோடி செலவில் 42 காவல் நிலையங்கள், ரூ.84.53 கோடி செலவில் 14 இதர காவல் துறை கட்டிடங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

ரூ.45.26 கோடி செலவில் 94 சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.26 கோடி கூடுதல் செலவில் சிறைவாசிகளுக்கான புதிய உணவு முறையை மாற்றியமைத்திட ஆணை பிறப்பித்தார். அதன்படி புதிய உணவுமுறை 5.6.2023 முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. 2021 முதல் 2023 முடிய 61,288 தீ விபத்து அழைப்புகளிலும், 2,57,209 மீட்பு அழைப்புகளிலும் பணியாற்றி 42,224 மனித உயிர்களையும், ரூ.605.06 கோடி மதிப்புள்ள உடைமைகளையும் காப்பாற்றியுள்ளனர்.

தீயணைப்பு பணியாளர்களின் பாதுகாப்பிற்காக ரூ.55.62 கோடி செலவில் தலைக்கவசம் மற்றும் காலணியுடன் கூடிய 1850 தீ பாதுகாப்பு உடைகள், 650 மூச்சுக் கருவிகள், பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய 3500 மீட்பு உடைகள் வாங்கிட ஆணையிட்டுள்ளார். ரூ.72.82 கோடி வழங்கி, தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்காக 75 புதிய நீர்தாங்கி வண்டிகள், 12 அவசரகால சிறிய மீட்பூர்திகள், 44 பெரும் தண்ணீர் லாரிகள், ஒரு வான்நோக்கி நகரும் ஏணி கொண்ட ஊர்தி, 7 அதி உயரழுத்த நீர்தாங்கி வண்டி, 1 சிறிய நுரைநகர்வு ஊர்தி, 50 ட்ரோன்கள், 4 புகைவெளியேற்றும் கருவி, 21 கோம்பி கருவிகள், ஆட்களை ஏற்றிச் செல்லும் ஊர்திகள் 4 முதலியன கொள்முதல் செய்யப்படுகின்றன.

பொதுமக்களின் சிறப்பான சேவைக்கென ரூ.62.18 கோடி செலவில் திங்கள்நகர், கோவைபுதூர், ஒரகடம், திருவெறும்பூர், ராதாபுரம், ரிசிவந்தியம் உள்ளிட்ட 21 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்களும் சிவகாசி, ஓசூர், தாம்பரம், ராணிப்பேட்டை ஆகிய 4 தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு நிலையங்களும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. பூந்தமல்லி, கீழ்ப்பாக்கம் தீயணைப்பு நிலையங்கள் ரூ.1.06 கோடி செலவில் மேம்படுத்தப்படுகின்றன. தீயணைப்பு மீட்பு பணித்துறை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளை மேம்படுத்தும் விதமாக ரூ.39.30 கோடி செலவில் மாநில பயிற்சி கழகம் மற்றும் உலகத்தரத்திலான நிகழ்நேர மாதிரி கூடம் ஆகியவற்றை காலவாக்கத்தில் அமைத்திடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இவற்றின் வாயிலாக – தமிழ்நாட்டின் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் அனைத்தும் மிகச் சிறப்பாக செயல்பட்டு சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமைதியான விழாக்கள்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை சிறப்பாக விளங்குவதால் மக்கள் அதிகம் கூடும் விழாக்கள் அனைத்தும் அமைதியாக நடந்து முடிந்துள்ளன. எடுத்துக்காட்டாக;
* 40 லட்சம் பேர் கூடிய திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா
* 2 லட்சம் பேர் பங்கெடுத்த மதுரை சித்திரை திருவிழா
* 8 லட்சம் பேர் திரண்ட திருச்செந்தூர் சூரசம்ஹாரம்
* 5 லட்சம் பேர் கூடிய பழனி தைப் பூச திருவிழா
* 12 லட்சம் பேர் பங்கேற்ற குலசேகரப்பட்டினம் தசரா
* 3 லட்சம் பேர் பங்கேற்ற வேளாங்கண்ணி தேவாலய கொடியேற்ற திருவிழா
* 20 ஆயிரம் பேர் பங்கேற்ற நாகூர் சந்தனக்கூடு திருவிழா உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் விழாக்கள் அனைத்தும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது நமது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை சிறப்பாகப் பராமரிக்கப்படுவதன் அடையாளமாகும்.

The post காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் அனைத்தும் மிக சிறந்த முறையில் செயல்பட்டு தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது: கொரோனா களப்பணியாற்றிய 1.17 லட்சம் காவலர்களுக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.58.50 கோடி ஊக்கத்தொகை வழங்கல்; தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Corona field ,Tamil ,Nadu ,Government ,CHENNAI ,Prisons ,Fire and Rescue Departments ,Tamil Nadu government ,Chief Minister ,M.K.Stal ,Jail Department ,Fire Department ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...