×

சிசிடிவி பதிவுகள் இல்லை, விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை, இந்தாண்டும் நீட் தேர்வில் முறைகேடு : :தேசிய தேர்வு முகமைக்கு ஐகோர்ட் காட்டம்

மதுரை : 2019 நீட் தேர்வில் நடைபெற்ற ஆள் மாறாட்ட வழக்கு தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழகத்தில் 2019-ல் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆள்மாறாட்டம் செய்து சென்னையைச் சேர்ந்த மாணவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது தெரியவந்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து ஆள்மாறாட்டம் செய்தவர்கள், இதற்கு உதவிய பெற்றோர், இடைத்தரகர்கள் என பலரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய தருண் மோகன், வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது தேசிய தேர்வு முகமை எதிர்மனுதாராக சேர்க்கப்பட்டது.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “2019 நீட் ஆள்மாறாட்ட வழக்கில், எத்தனை பேர் கைது? இடைத் தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா? இது தொடர்பாக CCTV பதிவுகள் இல்லை, விண்ணப்பங்களை தேசிய தேர்வு முகமை இதுவரை வழங்கவில்லை. ஒரு அமைப்பு கேட்கும் அனைத்து விவரங்களையும் வழங்கினால்தானே வழக்கை முழுமையாக விசாரிக்க இயலும். இந்த ஆண்டும் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. தேசிய தேர்வு முகமை வழங்கிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றால் வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற நேரிடும்,”இவ்வாறு தெரிவித்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

The post சிசிடிவி பதிவுகள் இல்லை, விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை, இந்தாண்டும் நீட் தேர்வில் முறைகேடு : :தேசிய தேர்வு முகமைக்கு ஐகோர்ட் காட்டம் appeared first on Dinakaran.

Tags : iCourt ,National Examination Agency ,Madurai ,Madurai Branch Saramari ,National Selection Agency ,Tamil Nadu ,CHENNAI ,iCourt Kadam ,Dinakaran ,
× RELATED சிறைக்கு வரும் முதல் குற்றவாளி: ஐகோர்ட் கேள்வி