×

ஈஷா மண் காப்போம் சார்பில் 28ல் பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா: கதிர் ஆனந்த் எம்.பி. தொடங்கி வைக்கிறார்

வேலூர்: ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா” எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வேலூர் மாவட்டம் ஶ்ரீபுரம் பொற்கோவிலில் அமைந்துள்ள ஶ்ரீ நாராயணி மஹாலில் வரும் ஜூலை-28 ஆம் தேதி நடைபெற உள்ள இந்நிகழ்வை பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தொடங்கி வைக்கிறார். இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு வேலூர் முத்தண்ணா நகரில் உள்ள ஈஷா யோக மையத்தில் நடைப்பெற்றது. இதில் ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துக்குமார் அவர்கள் பங்கேற்று பேசினார்.

அவர் பேசுகையில், ” ஈஷா மண் காப்போம் இயக்கம் கடந்த 15 வருடங்களாக நம் மண்ணை காக்கும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை எடுத்து சென்ற வண்ணம் உள்ளது. இவ்வியக்கத்தின் மூலம் இதுவரையில் 25,000 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 8,000 விவசாயிகளுக்கு மேல் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்திய அரசு சமீபத்திய பட்ஜெட்டில் வரும் இரண்டு ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்திற்கு மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் நோக்கமும் அது தான். எனவே இயற்கை விவசாயத்தை மென்மேலும் விரிவுப்படுத்தும் நோக்கத்தோடு ஒவ்வொரு பயிருக்கு ஏற்றவாறான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இது ஆடி பட்டம் காலம் என்பதால் நெல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த நெல் திருவிழா நடத்தப்படுகிறது.

மேலும் நெல் விவசாயத்தை பல வருடம் செய்த போதிலும், போதிய வருவாய் இல்லாமல் விவசாயிகள் சோர்வாக உள்ளனர். அதே வேளையில் சில முன்னோடி விவசாயிகள் நெல் விவசாயத்தை வெற்றிகரமாகவும், லாபகரமாகவும் செய்து வருகின்றனர். நெல் விவசாயத்தை எவ்வாறு லாபகரமாக செய்ய முடியும் என்பது குறித்த தங்களின் அனுபவங்களை முன்னோடி நெல் விவசாயிகள் இந்த “பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா” வில் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் வேளாண் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் என ஏராளமானோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேச உள்ளனர். குறிப்பாக மரபு வழி கால்நடை மருத்துவரான டாக்டர் திரு. புண்ணியமூர்த்தி, பூச்சியியல் வல்லுநர் திரு. பூச்சி செல்வம், நெல் வயலில் மீன் வளர்த்து அசத்தி வரும் விவசாயி திரு. பொன்னையா மற்றும் மதிப்பு கூட்டல் மூலம் பல லட்சங்களில் வருவாய் ஈட்டும் தான்யாஸ் நிறுவனர் திரு. தினேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.

மேலும் இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாக பொதுமக்களையும், விவசாயிகளையும் இணைக்கும் வகையிலான விவசாயிகளின் நேரடி சந்தை நடைபெற உள்ளது. இந்த சந்தையில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இடம்பெற உள்ளன. இதில் பாரம்பரிய அரிசி வகைகள், நாட்டு காய்கறிகள் மற்றும் அதன் விதைகள், நம் மரபு திண்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு வேளாண் விளைப் பொருட்கள் சந்தைப்படுத்தப்பட உள்ளன.

அது மட்டுமின்றி பாரம்பரிய நெல்லை பரவலாக்கம் செய்ய உதவும் வகையில் விதை நெல்லும் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. அத்துடன் நெல் விவசாயிகளுக்கு பயன்படும் எளிய கருவிகளின் கண்காட்சி மற்றும் விற்பனை, நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களின் கண்காட்சி மற்றும் 200க்கும் மேற்பட்ட மரபு காய்கறிகளினுடைய கண்காட்சி மற்றும் விற்பனையும் நடைபெற உள்ளது.

மேலும் கூடுதல் சிறப்பாக இத்திருவிழாவில் இயற்கை முறையில் சிறப்பாக செயல்படும் 10 விவசாயிகளை தேர்ந்தெடுத்து “மண்ணை காக்கும் விவசாயிகளுக்கு மண் காப்போம் விருதுகள்” வழங்கப்பட இருக்கிறது. இந்த பிரம்மாண்ட திருவிழாவில் 2000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ள உள்ளனர். இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் 8300093777, 9442590077 என்ற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.” இவ்வாறு அவர் பேசினார்.

The post ஈஷா மண் காப்போம் சார்பில் 28ல் பாரத பாரம்பரிய நெல் மற்றும் உணவுத் திருவிழா: கதிர் ஆனந்த் எம்.பி. தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Indian Traditional Rice and Food Festival ,Isha Mud Kapom ,Kadir Anand M. B. Begins ,Vellore ,Isha Mud Kapom Movement ,Shri Narayani Mahal ,Sripuram Poncho, Vellore District ,Isha Mani Kapom ,Kadir Anand M. B. ,
× RELATED ஈஷா மண் காப்போம் சார்பில் கோவையில்...