கோட்டா: நீட் தேர்வு பயிற்சி கட்டணத்துக்கான ஜிஎஸ்டி குறைக்கப்படாதது ஏமாற்றம் தருவதாக நீட் தேர்வர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 2024-25ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இதில் கல்வி கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் நீட் தேர்வு பயிற்சி மைய கட்டண ஜிஎஸ்டி குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் வௌியிடப்படவில்லை. இதற்கு மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூரை சேர்ந்த மாணவி ஒருவர் கூறுகையில், “கல்வி என்பது நமது உரிமை. அதற்கு எந்த வரிகளும் விதிக்கப்பட கூடாது. நீட் பயிற்சி கட்டணத்தின் 18 சதவீத ஜிஎஸ்டியில் எந்த நிவாரணமும் அளிக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது.
ஜிஎஸ்டி குறைக்கப்பட்டிருந்தால் எங்கள் பெற்றோரின் நிதிசுமை குறைந்திருக்கும்” என வேதனையுடன் தெரிவித்தார். ராஜஸ்தானின் ஜோத்பூரை சேர்ந்த நீட் தேர்வாளர் ஒருவர் கூறும்போது, “கல்விக்கான நிதி குறைந்த அளவே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நீட் பயிற்சி கட்டணத்தில் ஜிஎஸ்டி குறைக்கப்படவில்லை. நியாயமான. முறைகேடுகளற்ற நீட் தேர்வை நடத்தும் விதமாக தேசிய தேர்வு முகமையை வலுப்படுத்த நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தோம். இதில் எந்த அறிவிப்பும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது” என குமுறலை வௌிப்படுத்தினார்.
The post 2024-25ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் நீட் பயிற்சி கட்டண ஜிஎஸ்டி குறைக்கப்படாதது ஏமாற்றமே: மாணவர்கள் குமுறல் appeared first on Dinakaran.