×

ஆட்சியை காப்பாற்ற பாரபட்சமாக நிதி ஒதுக்குவது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும் செயல்: ஒன்றிய பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வேதனை

சென்னை: ஒன்றிய அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு என்ற ஒரு வார்த்தை கூட இல்லாதது மோடியின் கபட நாடகத்தை அம்பலமாக்கியுள்ளது என்றும், ஆட்சியை காப்பாற்ற பாரபட்சமாக நிதி ஒதுக்குவது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும் செயல் என்றும், தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது ஏமாற்றத்தை தருகிறது என்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசின் பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள் வருமாறு:

* செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): இன்றைக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசை காப்பாற்றுவது நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும்தான். அதனால் அவர்கள் விடுத்த கோரிக்கைகளின் அடிப்படையில் பீகார் மாநிலத்திற்கு ரூ.26 ஆயிரம் கோடி நிதியும், ஆந்திர மாநிலத்திற்கு ரூ.15 ஆயிரம் கோடி சிறப்பு நிதியாக நிர்மலா சீதாராமன் வாரி வழங்கியிருக்கிறார். தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு என்ற ஒரு வார்த்தை கூட இல்லாதது மோடியின் கபட நாடகத்தை அம்பலமாக்கியுள்ளது. தங்களது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள பாரபட்சமாக நிதி ஒதுக்குவது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற செயலாகும்.

* வைகோ (மதிமுக): ஒன்றிய பட்ஜெட்டில் பீகார், ஆந்திரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் வைத்த கோரிக்கைகளை ஒன்றிய நிதியமைச்சர் புறந்தள்ளி இருக்கிறார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லை. கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் மற்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லை.

* முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி): மைனாரிட்டி ஒன்றிய அரசாங்கத்தை தாங்கிப் பிடிக்கிற ஐக்கிய ஜனதா தளத்தையும், தெலுங்கு தேசம் கட்சியையும் திருப்திபடுத்துவதற்கு நிதி அள்ளிக் கொட்டப்பட்டுள்ளது.

* ராமதாஸ் (பாமக நிறுவனர்): நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாததும் ஏமாற்றம் அளிப்பவையாக உள்ளன. தமிழ்நாட்டிற்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது.

* ஜி.கே.வாசன் (தமாகா): ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள் அனைத்து தரப்பு மக்களுக்குமான, வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான பட்ஜெட்டாக இது தயாரிக்கப்பட்டுள்ளது.

* கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி): ஒன்றிய நிதிநிலை அறிக்கை எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தமிழக திட்டங்களுக்கும் நிதி ஒதுக்காமல் தமிழ்நாட்டையே புறக்கணித்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும்.

* பிரேமலதா (தேமுதிக): தமிழ்நாட்டில் புதிதாக விவசாயத்திற்கோ, ரயில்வே துறையிலையோ, சாலைகளுக்கோ என எந்தவொரு அறிவிப்பும் இல்லை என்பது வேதனை அளிக்கிறது.

* இதுபோல, தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி), ஜவாஹிருல்லா (மமக), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), வி.கே.சசிகலா உள்ளிட்டோரும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

The post ஆட்சியை காப்பாற்ற பாரபட்சமாக நிதி ஒதுக்குவது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கும் செயல்: ஒன்றிய பட்ஜெட் குறித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union Budget ,Chennai ,Union government ,Modi ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...