×
Saravana Stores

வருமானவரி விதிப்பில் சிறிய மாற்றம் நடுத்தர மக்கள் ஏமாற்றம்: உச்சவரம்பு அதிகரிக்கப்படாததால் கடும் அதிருப்தி, தங்கம், வெள்ளி, செல்போன் விலை குறைகிறது

புதுடெல்லி: மக்களவையில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நடப்பு நிதியாண்டிற்கான (2024-25) முழு பட்ஜெட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படாததால் நடுத்தர மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். வருமான வரி விதிப்பில் சிறிய மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. சுங்க வரி குறைப்பின் மூலம் தங்கம், வெள்ளி, செல்போன் விலை குறைய வாய்ப்புள்ளது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நடப்பாண்டிற்கான முழு பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார்.

இவர் தாக்கல் செய்த 7வது பட்ஜெட் இது. ஒவ்வொரு முறை பட்ஜெட் அறிவிப்பின் போதும், சம்பளதாரர்களுக்கு வருமான வரியில் சலுகைகள் அறிவிக்கப்படுமா என்பதே பெரிய அளவிலான எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த எதிர்பார்ப்பு, பாஜ ஆட்சியில் கடந்த 10 ஆண்டாக நிறைவேறவில்லை. இம்முறை ஒன்றியத்தில் பாஜ தடுமாற்றத்துடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் தனது சரிவை ஈடுகட்ட சலுகைகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஜனாதிபதி முர்முவும் நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றிய போது பட்ஜெட்டில் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்புகள் இடம்பெறும் என நம்பிக்கை அளித்தார். ஆனால் வழக்கம் போல், நடுத்தர வர்க்கத்தை சந்தோஷப்படுத்தக் கூடிய எந்த அறிவிப்புகளும் நிதி அமைச்சரின் நேற்றைய 7வது பட்ஜெட்டிலும் இடம் பெறவில்லை. வருமான வரிச்சலுகைக்கான சம்பள உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்கிற எதிர்பார்ப்பு நடக்கவில்லை.

புதிய வருமான வரி முறையில் நிலையான வரிக்கழிவு ரூ.50,000ல் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மற்றபடி, ஆண்டுக்கு ரூ.3 லட்சம் சம்பளம் வரை வரி கிடையாது. இதுவரை ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரையில் 5 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில் இது ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்த பிரிவு ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை 10 சதவீத வரியாக இருந்தது தற்போது ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சமாகவும், ரூ.9 லட்சம் முதல் 12 லட்சம் வரை 15 சதவீத வரியாக இருந்தது ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சமாகவும் மாற்றப்பட்டுள்ளது.

இந்த புதிய வரி விதிப்பு முறையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த மாற்றம் மூலம் மாதச்சம்பளதாரர்கள் ஆண்டுக்கு ரூ.17,500 வரை வரி சேமிக்கலாம். இந்த சிறிய மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. பென்ஷன்தாரர்களுக்கு குடும்ப பென்ஷன் கழிவு ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தவிர, தங்கம், வெள்ளி, செல்போனுக்கான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளன. இதனால் அவற்றின் விலைகள் குறைய உள்ளன.

3 புற்றுநோய் மருந்துக்கான சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இது புற்றுநோயாளிகளுக்கு ஆறுதலான அம்சமாக இடம் பெற்றுள்ளது. அனைத்து வகை முதலீட்டாளர்களுக்கும் ஏஞ்சல் வரி நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். அதே சமயம், அந்நிய முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

விவசாய துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான ரூ.11.11 லட்சம் கோடி ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒன்றியத்தில் தனது ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவும், கூட்டணி கட்சிகளை திருப்திபடுத்தவும் ஆந்திரா, பீகாருக்கு சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, நிதி அமைச்சரின் பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

* நடப்பு நிதியாண்டில் கடன் நீங்கலாக மொத்த வருவாய் ரூ.32.07 லட்சம் கோடியாகவும், மொத்த செலவு ரூ.48.21 லட்சம் கோடியாகவும் இருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மொத்த வரி வருவாய் ரூ.25.83 லட்சம் கோடியாக இருக்கும். இதன்படி நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை ஜிடிபியில் 4.9 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்த ஆண்டில் 4.5 சதவீதமாக குறைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

* எக்ஸ்ரே பேனல்கள் மீதான சுங்க வரி 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

* உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர் கல்வியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ரூ.10 லட்சம் வரையிலான கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் மூலம் எந்த சலுகைகளும் பெறாத மாணவர்கள் இந்த திட்டத்தில் பலன் பெறுவார்கள்.

* பெண்கள் மற்றும் சிறுமிகள் மேம்பாட்டுக்காக ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்படும்.

* வடகிழக்கு மாநிலங்களில் இந்திய அஞ்சல் பேமண்ட் வங்கியின் 100 கிளைகள் திறக்கப்படும்.

* 25,000 கிராமப்புற குடியிருப்புகளுக்கு அனைத்து பருவ நிலைகளையும் தாக்குபிடிக்கக் கூடிய இணைப்பு வசதியை ஏற்படுத்த, பிரதமரின் கிராமச்சாலைகள் திட்டத்தின் 4ம் கட்டம் செயல்படுத்தப்படும்.

* குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் (எம்எஸ்எம்இ) பிணை மற்றும் உத்தரவாதம் இல்லாமல் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கு கடன் வாங்குவதை எளிதாக்க புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். தருன் பிரிவின் கீழ் முத்ரா கடன் பெற்று முறையாக திருப்பிச் செலுத்துபவர்களுக்கு, முத்ரா கடன் பெற வரம்பு தற்போதைய ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்.

* எம்எஸ்எம்இக்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஆன்லைன் வர்த்தக ஏற்றுமதி மையங்கள் உருவாக்கப்படும்.

* பிரதமர் ஆவாஸ் திட்டத்தின் கீழ் ஒரு கோடி நகர்ப்புற ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் வீடு வாங்க ஒன்றிய நிதியுதவி ரூ.2.2 லட்சம் கோடி உட்பட ரூ.10 லட்சம் கோடி அடுத்த 5 ஆண்டுகளில் முதலீடு செய்யப்படும்.

* புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் டிரான்ஸ்டுஜூமாப் டெக்ரக்ஸ்டீகான், ஒசிமெர்டினிப் மற்றும் துருவலுமாப் ஆகிய மூன்று மாத்திரைகளுக்கு முழு சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

* தொழிலாளர்களில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். தங்கும் விடுதிகளை அமைப்பதன் மூலமும், பெண்களுக்கான குறிப்பிட்ட திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் பங்கு பெறுவது எளிதாகும்.

* பழங்குடியினர் அதிகமுள்ள கிராமங்கள் மற்றும் மாவட்டங்களில் அவர்களது குடும்ப, சமூக-பொருளாதார மேம்பாடு திட்டம் வகுக்கப்படும். இதன் மூலம் 63,000 கிராமங்களைச் சேர்ந்த 5 கோடி பழங்குடியினர் பயன் பெறுவார்கள்.

* ஊரக மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* 12 தொழில் பூங்காக்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்படும்.

* திவால் சட்ட நடவடிக்கைகளில் தீர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தளம் உருவாக்கப்படும்.

* பீகாரில் உள்ள பீர்பைண்டியில் புதிய 2400 மெகாவாட் மின் நிலையம் அமைப்பது உள்ளிட்ட மின் திட்டங்கள் ரூ.21,400 கோடியில் மேற்கொள்ளப்படும். பீகாரில் புதிய விமான நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் விளையாட்டுக்கான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.

* அதிக முத்திரைக் கட்டணம் வசூலிக்கும் மாநிலங்கள் அவற்றின் கட்டணத்தை குறைப்பது ஊக்குவிக்கப்படும். மேலும், பெண்கள் வாங்கும் சொத்துகளுக்கான வரிகளை மேலும் குறைக்க பரிசீலிக்கப்படும்.

* அடுத்த 10 ஆண்டுகளில், ரூ.1,000 கோடி கூட்டு தொழில் மூலதனத்தில் விண்வெளி பொருளாதாரத்தை 5 மடங்கு விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.

* எரிசக்தி பாதுகாப்பில் கவனம் செலுத்துதல், வேலைவாய்ப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கொள்கை வெளியிடப்படும்.

* பீகாரில் அடிக்கடி வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது. நேபாளத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் இன்னும் மேம்படுவில்லை. இதற்காக அரசு ரூ.11,500 கோடி மதிப்பீட்டில் அரசு நிதி உதவி வழங்கும்.

* ஜிஎஸ்டியின் பயன்களை மேலும் மேம்படுத்த, வரி அமைப்பை சீரமைப்பதற்கான முயற்சியில் அரசு ஈடுபடும்.

* மொபைல் போன்கள், மற்றும் உதிரி பாகங்கள் (சார்ஜர்) மீதான அடிப்படை சுங்க வரியை 15 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவீதமாகவும், பிளாட்டினத்துக்கு 6.4 சதவீதமாகவும் குறைக்கப்படும்.

* எரிசக்தி பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்படும். இந்த துறையில் வேலை வாய்ப்பு மற்றும் நீடித்த தன்மையை உறுதி செய்வதற்கான கொள்கை விரைவில் வெளியிடப்படும். சோலார் கூரைகள் அமைக்க பிரதமர் சூரிய ஒளி இலவச மின்சார திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

* நீண்டகால மூலதன ஆதாயத்தின் மீது 12.5 சதவீத வரி விதிக்கப்படும். இவ்வாறு பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது.

* புதிய வருமான வரி முறையில் தனிநபர் வருமான வரி
ஆண்டு சம்பளம்         வரி
ரூ.3 லட்சம் வரை வரி இல்லை
ரூ.3 லட்சம் – ரூ.7 லட்சம் 5%
ரூ.7 லட்சம் – ரூ.10 லட்சம் 10%
ரூ.10 லட்சம் – 12 லட்சம் 15%
ரூ.12 லட்சம் – ரூ.15 லட்சம் 20%
ரூ.15 லட்சத்துக்கு மேல் 30%

The post வருமானவரி விதிப்பில் சிறிய மாற்றம் நடுத்தர மக்கள் ஏமாற்றம்: உச்சவரம்பு அதிகரிக்கப்படாததால் கடும் அதிருப்தி, தங்கம், வெள்ளி, செல்போன் விலை குறைகிறது appeared first on Dinakaran.

Tags : NEW DELHI ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED நிர்மலா சீதாராமனை கண்டித்து ஆர்ப்பாட்டம்