×

தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வுக்கு அதிமுகவே காரணம்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வுக்கு அதிமுகவே காரணம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுகவினர் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மின் கட்டண உயர்வு குறித்து அதிமுக போராட்டம் நடத்தியது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்; மின் கட்டண உயர்வை எதிர்த்து அதிமுக போராட்டம் நடத்தியது வேடிக்கையானது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல அதிமுக செயல்பாடு உள்ளது.

ஒன்றிய அரசு உதய் திட்டத்தை கொண்டுவந்தபோது முதல்வராக இருந்து ஜெயலலிதா அதை கையெழுத்திட மறுத்துவிட்டார். உதய் மின்திட்டத்தில் தமிழ்நாட்டை இணைத்து கையெழுத்திட்டது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான். அதிமுக அரசின் 10 ஆண்டு திறனற்ற ஆட்சியால் மின்துறைக்கு ரூ.1,13,266 கோடி நிதிஇழப்பு ஏற்பட்டது. உதய் மின்திட்டத்தில் கையெழுத்திட்டத்தால்தான் மின்கட்டணம் உயர்த்தப்படுகிறது. நிதி சுமையை சரிகட்டவே கட்டண உயர்வு செய்துள்ளோம். தமிழகத்தில் மின்கட்டணம் உயர்வுக்கு அதிமுகவே காரணம். அதிமுக ஆட்சியில் பலமுறை மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. அதிமுக ஆட்சியில் 2012-ல் 3.7%, 2013-ல் 3.5%, 2014-ல் 16.93% மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நிலக்கரி கொள்முதல் ஊழல் நடைபெற்றது என்பதை அனைவரும் அறிவர். மின்சார வாரியத்தின் வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் ரூ.32,104 கோடியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைளை ஒன்றிய அரசு புறக்கணித்துள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் தான் மிக குறைந்த அளவில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

The post தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்வுக்கு அதிமுகவே காரணம்: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Dangam Tennarasu ,Chennai ,Thangam Thenrarasu ,Minister Dangam Tennarasu ,
× RELATED தமிழ்நாட்டில் காற்றாலை மின்உற்பத்தி...