×

மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் வேதனை: சேறும், சகதியுமான சாலையில் கர்ப்பிணியை டோலியில் தூக்கி வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

திருமலை: சாலை வசதி இல்லாததால் கர்ப்பிணியை 3.5 கிலோ மீட்டர் தூரம் சேறும், சகதியுமான சாலையில் டோலிகட்டி ஆம்புலன்ஸ் ஊழியர்கள், பொதுமக்கள் தூக்கி வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸில் அழைத்துச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அட்டதிகல கிராமம் அருகே டி.சோடவரம் என்ற மலைக் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஜஸ்விதா (25). நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் ஆம்புலன்சை டிரைவர் அசோக் ஓட்டி வந்தார். அவருடன் மருத்துவ உதவியாளர் நவாஸ் மற்றும் பிஎச்ஓ ரத்தினம் ஆகியோர் வந்தனர். அப்போது சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்து கிடந்தது. இவற்றை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அகற்றிவிட்டு டி.சோடவரம் அடிவாரம் வரை சென்றனர். ஆனால் அங்கிருந்து மலைக்கு செல்லும் சாலை வசதி இல்லாததால் சேறும், சகதியுமாக காணப்பட்டது. இதில் ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆம்புலன்ஸை அங்கேயே நிறுத்திவிட்டு ஊழியர்கள், கர்ப்பிணியின் வீட்டிற்கு நடந்தே சென்றனர்.

அங்கிருந்து டோலி கட்டி கர்ப்பிணி ஜஸ்விதாவை, பொதுமக்கள் உதவியுடன் சுமார் 3.5 கிலோ மீட்டர் தூரம் சேற்றில் தூக்கிக்கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்சில் ஏற்றி அட்டதிகல அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அட்டதிகல மற்றும் சுற்றுப்புற மலை கிராமங்களில் சாலை வசதி இல்லை. இதனால் நோயால் பாதிக்கப்படுபவர்கள், கார்ப்பிணிகளை டோலி கட்டி தூக்கி வந்துதான் மருத்துவம் பார்க்க வேண்டியுள்ளது. எனவே இதை சீரமைக்க முதல்வர் சந்திரபாபு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் வேதனை: சேறும், சகதியுமான சாலையில் கர்ப்பிணியை டோலியில் தூக்கி வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Toligatti ,East Godavari District, Andhra Pradesh ,Atathikala village ,Dinakaran ,
× RELATED திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில்...