×

கோவையில் குடியிருப்பு அருகே இனச்சேர்க்கையால் 2 நாள் சோர்வாக கிடந்த அரியவகை பெண் ராஜநாகம்

மேட்டுப்பாளையம்: கோவை அருகே இனச்சேர்க்கையில் ஈடுபட்ட 13 அடி நீள அரியவகை பெண் ராஜநாகம் 2 நாட்கள் சோர்வாக கிடந்துள்ளது. இதனை வனத்துறையினர் பாம்பு பிடி வீரர்கள் உதவியுடன் மீட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வனத்தில் பத்திரமாக விடுவித்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ளது பாலப்பட்டி. இங்குள்ள வனத்தையொட்டி உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் ராஜநாகம் ஒன்று தென்பட்டது.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிறுமுகை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனச்சரகர் மனோஜ் குமார் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் காஜாமைதீன் தலைமையிலான பாம்பு பிடி வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அரியவகையும், கொடிய விஷமுள்ள பெண் ராஜநாகத்தை 2 மணி நேரம் போராடி மீட்டனர். பின்னர் அதன் உடல் நிலை குறித்து ஆய்வு செய்தபோது இரை எதுவும் விழுங்காமல் சோர்வாக இருந்தது தெரியவந்தது.

முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அருகில் உள்ள குஞ்சப்பனை வனத்தில் பத்திரமாக விடுவித்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது: இந்த வகை பாம்புகள் இனச்சேர்க்கையில் ஈடுபட்டாலும் இதுபோல் ஒரே இடத்தில் சோர்வுடன் காணப்படும். கடந்த 2 தினங்களாக இரை உட்கொள்ளாததால் பாம்பால் நகர இயலவில்லை. தற்போது அதற்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வனப்பகுதியில் விடுவித்துள்ளோம். இனிமேல் ராஜநாகம் தானாகவே இரைதேடிக்கொள்ளும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கோவையில் குடியிருப்பு அருகே இனச்சேர்க்கையால் 2 நாள் சோர்வாக கிடந்த அரியவகை பெண் ராஜநாகம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Mettupalayam ,Dinakaran ,
× RELATED மேட்டுப்பாளையம் அருகே பைக்கில் வந்து...