சென்னை: எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களிடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளது. எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை மற்றொரு வழக்கறிஞரிடம் கைமாற்றி விடுவதற்கான பேச்சுவார்த்தை நீதிமன்ற வளாகத்தில் கடந்த 19ம் தேதி நடந்தது. அப்போது வழக்கறிஞர் செந்தில்நாதன் தரப்பினருக்கும் வழக்கறிஞர் விஜயகுமார், விமல் உள்ளிட்ட தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் இருதரப்பினரும் புகார் அளித்ததின் பேரில் 20 பேர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரியும், நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணை நடத்த கோரியும் வழக்கறிஞர் ஒருவர், சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ்பாபு அமர்வு முன்பு முறையீடு செய்தார். அதை ஏற்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, மோதல் சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரிக்கப்படும் என்று ஒப்புதல் அளித்துள்ளனர்.
The post எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களிடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கு appeared first on Dinakaran.