வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜனநாயக கட்சி வேட்பாளரும், தற்போதைய அதிபருமான ஜோ பைடன் விலகியுள்ளார். சொந்த கட்சிக்கும் எழுந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து தாம் போட்டியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அவர் அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட விரும்பிய பைடன் வேட்பாளர் தேர்வுக்கான மாகாண தேர்தல்களில் வெற்றி பெற்றார்.
ஆனால் கடந்த ஜூன் 27ம் தேதி டிரம்புடன் நடத்திய நேருக்கு நேரான விவாதத்தில் சரியாக வாதிட முடியாமல் பைடன் தடுமாறியது சலசலப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் தாம் போட்டியில் இருந்து விலக்கப்போவதில்லை என்று பிடிவாதமாக பைடன் கூறி வந்தார். கடந்த 11ம் தேதி வாஷிங்டனில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸிகியை ரஷ்ய அதிபர் புதின் என்று அழைத்தது சர்ச்சைகளின் உச்சமாக அமைந்தது. டிமென்ஷியா எனப்படும் பைடன் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட டிரம்ப் தனது பிரச்சாரங்களில் பைடனை கிண்டல் செய்ய தொடங்கினார். பென்சில்வேனியா பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு அவருக்கு அனுதாப அலைகளை உருவாக்கியது. அதே சமயம் வயது மூப்பு, மறதி, செயல்பாடின்மை போன்ற காரணங்களால் சொந்த கட்சி எம்பிக்களே பைடனுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்தசூழலில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனநாயக கட்சி மாநாட்டில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே பைடன் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பாக பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜனநாயக கட்சி மற்றும் நாட்டு மக்களின் விருப்பத்திற்கு இணங்க விலகல் முடிவை எடுத்துள்ளேன். அமெரிக்க மக்களுக்கும் கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துள்ள பைடன், தம்முடைய முடிவு தொடர்பாக இந்த வாரத்தில் விரிவாக நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையே துணை அதிபரான கமலா ஹாரிஸை அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் முன்மொழிந்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் தேர்வாக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
The post அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து பைடன் விலகல்: அடுத்து கொடுத்த அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.