×

தனியார் பள்ளிகளுக்கு நிகராக அங்கன்வாடி மையங்கள்: ஸ்மார்ட் டிவி மூலமும் கற்பிப்பு

டாலர் சிட்டியான திருப்பூரில் பனியன் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள் அதிகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதில் பணியாற்றுவதற்காக வெளி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர். ஒரு காலத்தில் அரசு பள்ளிகள் மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது தனியார் பள்ளிகள் அதிகரித்துவிட்டன. பெற்றோர் தங்கள் குழந்தைகளை அங்கு சேர்க்கும் நிலை வந்துவிட்டது.

ஆனால் திருப்பூருக்கு வேலை தேடி வரும் பாமர மக்களின் குழந்தைகள் பெரும்பாலும் அரசு பள்ளிகளில்தான் பயின்று வருகின்றனர். அப்படி அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலானோர் ஆரம்ப சுகாதார நிலைங்களில் அடிப்படை கல்விகளை பயின்றவர்கள்தான். அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிக்கு நிகரான வசதிகள் இல்லாமல் இருந்தது. திமுக அரசு பொறுபேற்ற பின் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தினர். இதனால் தற்போது தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் சேர்க்கை அதிகரித்து உள்ளது. குறிப்பாக ஆரம்ப கல்வி பயிலும் அங்கன்வாடி மையங்கள் தனியார் பள்ளிகளுக்கு நிகரான வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் 1,472 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 முதல் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை சேர்க்கலாம். திருப்பூரில் உள்ள ஒவ்வொரு அங்கன்வாடி மையமும் குறைந்தபட்சம் 30 குழந்தைகளோடு செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் அறிவுத்திறன் வளர்ச்சியடைய அங்கன்வாடி மையங்களில், 2 வயது முதல் 6 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கற்பிக்கப்படுகிறது. குழந்தைகளின் அறிவாற்றலை துாண்டும் வகையில், கதை, பாட்டு, விளையாட்டு வாயிலாக கல்வி கற்பிக்கப்படுகிறது.

அங்கன்வாடி மையத்தில், குழந்தைகள் கல்வி கற்க தேவையான உபகரணங்கள் உள்ளன. கல்வி பயிலும் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளை கண்டறிந்து, அதற்கு ஏற்ப அவர்களுக்கு சத்தான உணவு வழங்கப்படுகிறது. குழந்தைளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான உணவு வகைகள் அங்கன்வாடி மையம் வாயிலாக வழங்கப்படுகிறது. மேலும் 11 மாதங்களில் 11 வகையான பாடத்திடம் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு மொழி அறிவு, சமூக உறவு, உடல்நலம் ஆகியவைகள் குறித்து கற்பிக்கப்படுகிறது. அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை குழந்தைகளில் சீரான வளர்ச்சி மற்றும் அவர்களுடைய திறன் மேம்பாடுகள் குறித்து கண்காணிப்படுகிறது.

இது குறித்து தேவி கூறியதாவது: எனது இரண்டு மகள்களும் அங்கன்வாடி மையத்தில் தான் படிக்கிறார்கள். வீட்டில் இருக்கும் போது இருந்த விளையாட்டுத்தனம் மாறி தற்போது அவர்களாக படிக்கின்றார்கள். அங்கன் வாடி மையத்தில் குழந்தைகள் எளிமையாக கற்றுக்கொள்ளும் வகையில் அவர்களுக்கு புரியும்படி கற்றுக்கொடுக்கிறார்கள். இதனால் குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் படித்ததை வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் சொல்லும் நிலையில் உள்ளார்கள். அவர்களின் உடல்நலம் குறித்தும், உணவு பழக்கங்கள் குறித்தும் கற்று கொடுக்கிறார்கள். இதனால் குழந்தைகள் ஆரம்ப காலத்தில் நல்ல நிலையில் வளர்வதற்கு அங்கன்வாடி மையங்கள்தான் சிறந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

அங்கன்வாடி ஆசிரியை ரம்யா கூறியதாவது: காலை 8.45 மணி முதல் மாலை 3.50 மணி வரை அங்கன்வாடி மையங்கள் செயல்படுகிறது. 2 வயதிலிருந்து 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து முறையை கற்பிக்கிறோம். மேலும், அங்கன்வாடி மையங்கள் மூலம் பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், வளரிளம் பெண்கள் பயனடைகிறார்கள். ஸ்மார்ட் டிவி மூலம் குழந்தைகளுக்கு தேவையானவற்றை கற்பிக்கிறோம். மாதம் தோறும் குழந்தைகளுக்கு எடை, உயரம் அளவு எடுத்து சரியான முறையில் குழந்தைகளின் வளர்ச்சி உள்ளதா என பரிசோதிக்கபடுகிறது. அப்படி சரியான வளர்ச்சி இல்லாத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பிஸ்கெட் கொடுக்கப்பட்டு சீரான வளர்ச்சிக்கு உதவுகிறோம். 11 மாதங்களுக்கான தலைப்புகளுக்கு அதன் செய்முறை விளக்கத்தோடு கற்றுத்தருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூர், ஊரக குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செளமியா கூறியதாவது: தரமான பாடத்திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுகிறது. அனைத்து அங்கன்வாடி ஆசிரியர்களும், ஒவ்வொரு குழந்தைகளையும் தனித்தனியாக மொழி, உடல், அறிவு, சமூகம், மன வலிமை ஆகியவை குறித்து கண்காணிப்பார்கள். மாதா மாதம் அனைத்து குழந்தைகளின் வளர்ச்சி குறித்து அந்தந்த அங்கன்வாடி ஆசிரியர்கள் அறிக்கை சமர்பிக்க வேண்டும். அந்த அறிக்கையின் மூலம் குழந்தைகளின் வயதுக்கு தகுந்த வளர்ச்சி உள்ளதா என கண்காணிக்கப்படும். அப்படி வளர்ச்சி இல்லாத குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி அவர்களுக்கு கற்று கொடுக்கப்படும்.

இதேபோல், ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும், குழந்தைகளை அருகில் உள்ள இடங்களுக்கு அழைத்து சென்று அங்கிருக்கும் கல், மலர்கள், மரங்கள் குறித்து கற்று கொடுக்கப்படுகிறது. மதியத்திற்கு மேல் 4 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எழுத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதேபோல் அங்கன்வாடி மையத்தில் உள்ள ஒவ்வொரு விளையாட்டு பொருட்களும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாகவே உள்ளது. கல்வி மட்டுமல்ல சமூகம் சார்ந்தும் கற்று கொடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு காலை, மாலை என 50 கிராம் அளவிற்கு ஊட்டச்சத்து மாவு கொடுக்கப்படுகிறது.

மையங்களில் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்கப்படுகிறது. தக்காளி சாதம், லெமன் சாதம், வெஜ் புலாவ், காய்கறி சாதம், முட்டை, பச்சைபயறு, உருளை கிழங்கு, கொண்டை கடலை ஆகியவைகள் வழங்கப்படுகிறது. இதேபோல நடுநிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் 4 மற்றும் 5 வயது குழந்தைகளுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்து அவர்களுக்கு எல்.கே.ஜி, யூ.கே,ஜி பாடங்கள் கற்று கொடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

* வீட்டில் பெற்றோருடன் விளையாடிய குழந்தைகள் முதன்முதலாக பள்ளிக்கு வரும்போது கற்றலை எளிமையாக்க டிவி மூலம் குழந்தைகளுக்கான பாடம் கற்பிக்கப்படுகிறது.
* ஜனவரி மாதம் பண்டிகைகள் குறித்தும், பிப்ரவரி மாதம் நண்பர்கள், மார்ச் மாதம் பருவ காலங்கள் என 11 மாதங்களுக்கும் வெவ்வேறு பாடத்திட்டங்களில் கற்பிக்கப்படுகிறது.
* அங்கன்வாடி மையங்களுக்கும் வரும் குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் குறித்தும் அவைகளை உட்கொள்ளும் விதங்கள் குறித்தும் கற்பிக்கப்படுகிறது.

The post தனியார் பள்ளிகளுக்கு நிகராக அங்கன்வாடி மையங்கள்: ஸ்மார்ட் டிவி மூலமும் கற்பிப்பு appeared first on Dinakaran.

Tags : Anganwadi ,Tirupur ,dollar ,Dinakaran ,
× RELATED மாவட்ட திட்ட அலுவலகத்தை...